10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அட்டவணை வெளியீடு: முதல்முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி Class 10, Plus 2 exam schedule released: Use of calculators allowed for the first time
தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று வெளியிட்டார்.
தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான (2025-26) பொதுத் தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் நேற்று வெளியிட்டார். அதன்படி பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடைபெற உள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடக்கிறது. இதன் முடிவுகள் மே 8-ம் தேதி வெளியாகும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடத்தப்படும். முடிவுகள் மே 20-ம் தேதி வெளியாகும். பிளஸ் 2 வகுப்புக்கு பிப்.9 முதல் 14-ம் தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு பிப்.23 முதல் 28-ம் தேதி வரையும் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும்.
பிளஸ் 1 அரியர் பாடத் தேர்வுகள் மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும். இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்.16 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்பட்டு, பொதுத் தேர்வு முடிவுகள் மே 20-ல் வெளியிடப்படும். தேர்வுகள் காலை 10 முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும். தேர்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் அன்பில் மகேஸ் கூறியதாவது: நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.7 லட்சம் மாணவர்களும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.70 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர். ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாட்கள் இடைவெளி இருக்கும். எனவே, மாணவர்கள் அச்சம் கொள்ளாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவியாளர் (ஸ்கிரைப்) அனுமதிக்கப்படுவர்.
இந்தாண்டு முதல் பிளஸ் 2 கணக்குப் பதிவியல் தேர்வுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு இரு முறை தேர்வுகள் நடத்துவது போன்ற திட்டம் எதுவும் நம்மிடம் இல்லை. வினாத்தாள், விடைத்தாளை பாதுகாப்பதில் தேர்வுத் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் நேர்மையாக இருப்பதால்தான், தரமான மாணவர்கள் உயர்க் கல்வியில் சேருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், தமிழக பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் மா.ஆர்த்தி, தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், தேர்வுத் துறை இயக்குநர் கே.சசிகலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.