CPS : குரூப் இன்சூரன்ஸில் பங்களிப்பு ஓய்வூதிய நிதி முதலீடு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் CPS: Contribution pension fund investment in group insurance: Tamil Nadu government informs High Court
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதிக்கு அதிக வட்டி பெறும் நோக்கில் ‘குரூப் இன்சூரன்ஸ்’ திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரடெரிக் எங்கெல்ஸ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தமிழகத்தில் 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இதுவரை புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. மத்திய அரசு 2013-ல் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ளது. ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை.
ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக ஆய்வு நடத்திய வல்லுநர் குழு, அரசிடம் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்தப் பரிந்துரைகளை பின்பற்றுவது தொடர்பாக அரசாணையோ, விதிமுறைகளோ வகுக்கப்படவில்லை. இனால் ஓய்வூதியப் பலன்களை பெற முடியாமல் பலர் தவிக்கின்றனர்.
எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நிதித் துறைச் செயலாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎப்) விதிகளில் திருத்தம் செய்து, 27.5.2004-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையிலேயே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. வருங்கால வைப்புநிதி விகிதம் கருவூல ரசீதுகளின் வருவாயைவிட அதிகமாக இருப்பதால் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் வட்டியில் இடைவெளி உள்ளது.
இதை ஈடுகட்ட, பங்களிப்பு ஓய்வூதிய நிதியை இந்திய காப்பீட்டுக் கழகத்தின் பணப் பலனுடன் கூடிய புதிய குழு (குரூப் இன்சூரன்ஸ்) ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய அரசு நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தேக்க நிலை இருப்பதாக மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.
கடந்த அக்டோபர் மாதம் வரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணம் கேட்டு 54,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இவற்றில் 51,000 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும், இவ்வழக்கு விசாரணையில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக காலஅவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை டிச. 4-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.