பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன - அமைச்சர் அன்பில் மகேஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 9, 2025

பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன - அமைச்சர் அன்பில் மகேஸ்



நடப்பு கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகளும் டிசம்பருக்குள் முடிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

கல்விக்கான நிதியை ஒதுக்குவதில் பல்வேறு விதிமுறைகள் வகுத்து குழந்தைகளின் நலனில் மத்திய அரசு விளையாட வேண்டாம் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்த 179 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் டிஎன்பிஎஸ்சி மூலமாக பள்ளிக் கல்வித் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 167 உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், “அரசுப் பள்ளிகளில் கடந்த ஜூலை 30ம் தேதி வரை 4.03 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்த கல்வியாண்டில் இது இரு மடங்காக மாற வேண்டும்” என்றார். இந்த நிகழ்வின் போது பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தர மோகன், இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மகேஸ் கூறியது: “நடப்பு கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகளும் டிசம்பருக்குள் முடிக்கப்படும். 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான நிதியை தான் தற்போது மத்திய அரசு வழங்கியுள்ளது. பொதுவாகவே மத்திய அரசு நிதியை தாமதமாகவே வழங்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகவே பல்வேறு காரணங்களை கூறி நிதியை வழங்காமல் இருக்கின்றனர்.

அதையும் கடந்து துறைசார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதேநேரம் இந்த ஆண்டு வரவேண்டிய நிதி இன்னும் வராமல் இருப்பதால் ஒரு குழப்பமான நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றால் அவர்களுக்கு ஏற்ற தீர்ப்பு வராது என்று தெரிந்துகொண்டு தற்போது நிதியை விடுவித்துள்ளனர்.

நிதியை ஒதுக்குவதில் பல்வேறு விதிமுறைகள் வகுத்து குழந்தைகளின் எதிர்காலத்தில் மத்திய அரசு விளையாட வேண்டாம். ஆர்டிஇ மூலம் கடந்த கல்வியாண்டில் இணைந்த மாணவர்களிடம் பெற்ற கல்விக் கட்டணத்தை மீண்டும் பெற்றோர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அன்பில் மகேஸ் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.