கள்ளர் சீரமைப்பில் மறுக்கப்படும் மறு நியமனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 1, 2025

கள்ளர் சீரமைப்பில் மறுக்கப்படும் மறு நியமனம்

கள்ளர் சீரமைப்பில் மறுக்கப்படும் மறு நியமனம்

கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு மாணவர்கள் நலன் கருதி அந்த கல்வியாண்டு முழுவதும் பணி நீட்டிப்பு வழங்க வழிவகை செய்துள்ளது.

அதனடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும் கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்கி ஆணையிடப்பட்டு வருகின்றது. ஆனால் கள்ளர் சீரமைப்புத் துறையில் கல்வியாண்டின் இடையில் பணி ஓய்வு பெறுகின்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த வாய்ப்பு நடப்புக் கல்வியாண்டில் ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்தும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் கள்ளர் சீரமைப்பில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் நிர்வாக ரீதியான கட்டுப்பாடுகள் அனைத்தும் சென்னை மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் உள்ளதால் இதுபோன்று பல்வேறு நிர்வாகச் சிக்கல்களும் குளறுபடிகளும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

பணிவரன் முறை, தகுதிகாண் பருவம், தேர்வுநிலை போன்ற அனைத்துப் பணிகளும் தாமதமாக நடைபெற்றுக் கொண்டும் கிடப்பில் போடப்படும் உள்ளன. தொடர்ந்து நிர்வாகமானது மாணவர்கள் நலனிலும் ஆசிரியர்கள் நலனிலும் அலட்சியம் காட்டி வருவதுடன் அவர்களுக்கான உரிமைகளையும் பறித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு மாதங்களில் ஓய்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதையும் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதையும் காட்டுகிறது.

மேலும் பணி நீட்டிப்பு மறுக்கப்பட்ட ஆசிரியர்கள் பொது தேர்வுகளில் அதிக முறை 100% தேர்ச்சி சதவீதங்களை வழங்கி சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே சென்னை மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல ஆணையாளர் அவர்கள் பணி நீட்டிப்பு மறுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனடியாக தமிழக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை பணிநீட்டிப்பு வழங்க வேண்டும். இல்லையென்றால் கள்ளர் சீரமைப்புத் துறையில் மட்டும் பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டுள்ளதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தொடர் போராட்டங்களை நடத்திடுவோம் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் ராஜசேகர், தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக கள்ளர் பள்ளிகள் கிளையின் மாவட்டத் தலைவர் மாரீஸ்வரன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.