TET, தேர்ச்சி பெற்ற 1.20 லட்சம் பேர் காத்திருக்கும் போது ஒப்பந்த நியமனம் ஏன்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 9, 2025

TET, தேர்ச்சி பெற்ற 1.20 லட்சம் பேர் காத்திருக்கும் போது ஒப்பந்த நியமனம் ஏன்?



TET, தேர்ச்சி பெற்ற 1.20 லட்சம் பேர் காத்திருக்கும் போது ஒப்பந்த நியமனம் ஏன்? - Why contract appointments when 1.20 lakh TET passers are waiting?

தமிழகத்தில், டி.இ.டி., என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, 1.20 லட்சம் பேர் பல ஆண்டுகளாக காத்திருக்கும் போது, கல்வித்துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை நியமித்து வருவது ஏன் என, சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

தி.மு.க., 2021ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை, 90 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறி வந்தாலும், கல்வித்துறையில் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்து ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து ஆதாரங்களுடன் வெளியிட்டு, ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

ஆனால், நெருக்கடிகளின் தாக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு துறையின் அமைச்சர் மகேஷ் கொண்டு செல்வதில்லை என, வெளிப்படையாகவே ஆசிரியர்கள் விமர்சனம் செய்கின்றனர். வாக்குறுதி

குறிப்பாக, ஆசிரியர்கள் நியமனத்தில் கல்வித்துறையின் செயல்பாடு வெளிப்படையாக இல்லை. டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியராக நியமிக்கப்படுவர் என வாக்குறுதி அளித்தும், இதுவரை ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை.

அதேநேரம், அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் போக்கு தொடர்கிறது.

அந்த வகையில் இதுவரை, 4,989 இடைநிலை, 5,154 பட்டதாரி, 3,188 முதுநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு வாயிலாக நிரப்பப்பட்டு உள்ளன.

கடந்த 12 ஆண்டுகளாக ஒரு இடைநிலை ஆசிரியர் கூட நியமிக்கப்படாத நிலையில், டி.இ.டி., தாள் - 1 தேர்ச்சி பெற்ற 60,000 உட்பட, 1.20 லட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், இவ்வாறு ஒப்பந்தம் அடிப்படையில் நியமிப்பது ஏன்?

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என, ஆசிரியர் சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வர்கள் அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:

மத்திய அரசால், 2009ல் கொண்டு வரப்பட்ட, டி.இ.டி., தேர்வானது, தமிழகத்தில், 2011ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுவரை ஐந்து முறை தான் தேர்வு நடந்துள்ளது. 2024ல் ஒரு நியமன தேர்வு நடத்தியது. நடவடிக்கை வேண்டும்

அதில், குறைந்த பணியிடங்களை மட்டும் காட்டி, அதை நிரப்புவதாக அறிவித்துள்ளது. முழுமையான காலியிடங்களை வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் நியமனம் என்ற முறையை, அ.தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., கண்டித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க.,வும் அதே தவறை தான் செய்கிறது. தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.

வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடுகின்றனர். தனியார் மயம், ஒப்பந்த ஆசிரியர் நியமனம், கான்ட்ராக்ட் மயம் தான் ஆளுங்கட்சியின் கொள்கையா? 2026 தேர்தலுக்கு முன் அதிருப்தியை சரிசெய்ய முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.