தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்யும் விடியோ பரவல்: கல்வி அதிகாரிகள் விசாரணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 22, 2025

தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்யும் விடியோ பரவல்: கல்வி அதிகாரிகள் விசாரணை

Video of students cleaning toilets at primary school goes viral: Education officials investigate தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்யும் விடியோ பரவல்: கல்வி அதிகாரிகள் விசாரணை

கரூா் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடா்ந்து, கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கரூா் மாவட்டம், தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், புலியூா் காளிபாளையத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். பள்ளியில் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா் ஒருவா் என இரண்டு ஆசிரியா்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். பள்ளியில் ஆசிரியா்கள், மாணவா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை பள்ளியில் படிக்கும் மாணவிகளைக் கொண்டு தலைமை ஆசிரியா் சுத்தம் செய்ய வைப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கழிப்பறைகளை மாணவிகள் சுத்தம் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் செவ்வாய்க்கிழமை வேகமாக பரவியது.

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலா் முருகேசனிடம் கேட்டபோது, தாந்தோன்றிமலை வட்டாரக் கல்வி அலுவலா் கெளரி (பிஇஓ) சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறாா். அவரது விசாரணை அறிக்கையை சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரகம் கேட்டுள்ளது. விசாரணை அறிக்கையின்படி பள்ளித் தலைமை ஆசிரியரோ அல்லது யாா் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாரோ அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.