தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 24, 2025

தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை



தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை - Request for exemption from qualifying examination

அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 14 ஆண்டுகளாக பணியாற்றும் 1,500 ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை

தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் 14 ஆண்டுகளாக பாதுகாப்பின்றி பணியாற்றி வரும் 1,500 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கருதி, ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் அறிவிப்பை தமிழக முதல்வர் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்க வேண்டும் என அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அக்கூட்டமைப்பினர் முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது:

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுத்ததால், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்துக்கு மத்திய அரசு வழங்க மறுத்த ரூ.2,152 கோடியை தமிழக அரசின் சொந்த நிதியிலிருந்து ஒதுக்கி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்துள்ள முதல்வரை பாராட்டுகிறோம்.

தமிழகத்தில் முதன்முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்பாகவே நிரந்தரப் பணியிடங்களில் 2012 நவம்பர் 16 வரை பணியேற்ற அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் 1,500 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் 14 ஆண்டுகளாக கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் பணியேற்ற அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என்ற நிலைப்பாட்டுடன், உச்ச நீதிமன்ற வழக்கை தமிழக அரசு கடந்த வாரம் திரும்பப் பெற்றதை வரவேற்கிறோம்.

அதே காலகட்டத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு நிபந்தனையுடன் பணிபுரியும் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்ததை வரவேற்கிறோம்.

மேலும், பதவி உயர்விற்கும் தகுதித் தேர்வு நிபந்தனையை நீக்க, உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசின் ஆதரவு நிலைப்பாட்டை வரவேற்கிறோம். எனவே, ஒரே பிரச்சினையில், மூன்று வித நிலைப்பாட்டில் மூன்று சாராரையும் தமிழக அரசு காப்பாற்றி உள்ளது.

ஆனால், அதே பிரச்சினையில் சிக்கி, தற்போது வரை அரசால் கண்டுகொள்ளாத நிலையில், அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளாக பாதுகாப்பின்றி பணிபுரியும் 1,500 ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கருதி, தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஒரு தவிர்ப்பாணை வெளியிட்டு முதல்வர் காப்பாற்ற வேண்டும்.

தற்போது நடந்துவரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.