ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கண்டன அறிக்கை...
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கண்டன அறிக்கை...
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல் என்ற மாண்புமிகு நிதியமைச்சரின் அறிவிப்பிற்கு கடும் கண்டனம் 2025-26 பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கொள்கை முடிவுகள் அறிவிக்க வேண்டும் தலைமைச் செயலகச் சங்கத்தின் சார்பாக 24.01.2025 அன்று உணவு இடைவேளை கூட்டம் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு மாற்றாக மாண்புமிகு நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் கண்டனத்தினை பதிவு செய்கிறது. தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படாது என்பதை 2025 ஆம் ஆண்டு தமிழர் திருநாள்- பொங்கல் பரிசாக மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் அளித்துள்ளார்கள். இது மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு இல்லை என்றாலும், மாண்புமிகு நிதியமைச்சர் சட்டப்பேரவையிலேயே அறிவித்துள்ளதால், இது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும்.
தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் 16.11.2024ல் வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியில், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியான "பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்” என்பதற்கு சாத்தியம் இல்லை என கட்டியம் கூறும் விதமாக ஓய்வூதிய இயக்குநகரத்திற்கு மூடுவிழாவினை தமிழ்நாடு அரசு நடத்தியதற்கு கடும் கண்டனத்தினை பதிவு செய்திருந்தது. தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கணித்ததைப் போலவே தற்போதைய மாண்புமிகு நிதியமைச்சரின் ஓய்வூதியம் தொடர்பான சட்டப்பேரவை அறிவிப்பு உள்ளது.
ஏறத்தாழ கடந்த 4 ஆண்டுகளாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2021 தேர்தல் கால வாக்குறுதிகள் 100 சதவிகிதம் நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தினை அளித்துள்ளார்கள். ஆனால், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் எந்த வாக்குறுதியினையும் இந்த அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.
இதுநாள்வரை ஒன்றிய அரசின் குழுவையும் ஆந்திர அரசின் குழுவையும் கைகாட்டிக் கொண்டிருந்தார்கள். அவை வந்து விட்டன. தற்போது, வழிகாட்டு நெறிமுறைகள் வர வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படியே வழிகாட்டு நெறிமுறைகள் வந்தாலும், குழு அமைப்போம் என்று கூறுகிறார்கள். அவ்வாறு அமைத்த குழுவின் அறிக்கை கிடைத்ததும் முடிவு எடுப்போம் என்று கூறுகிறார்கள். இதையெல்லாம் சொல்வதற்குக்கூட நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
> குழு அமைத்து ஆய்வு செய்வோம் என்று சொன்னாலே, ஒரு கோரிக்கையின் மீதான முடிவினை எடுக்காமல் நீர்த்துப் போகச் செய்து முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கான ஏற்பாடுதான் என்பது உலகறிந்த இரகசியம். பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவதற்கு எத்தனை குழுக்களைத்தான் அமைப்பார்கள்?
ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாதபோது, அதன் வழிகாட்டு நெறிமுறைகளுக்காகக் காத்திருக்கிறோம் என்ற பசப்பு வார்த்தைகளை 100 சதவிகிதம் எந்த அரசு ஊழியரும் ஆசிரியரும் ஏற்க மாட்டார்கள். > தமிழ்நாட்டிலே ஒரு சொல்லாடல் உண்டு போகாத ஊருக்கு வழி தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று. இந்த சொல்லாடல்தான் தற்போது மாண்புமிகு நிதியமைச்சரின் அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நினைவுபடுத்துகிறது. ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்திலேயே தமிழ்நாடு அரசு தன்னை இணைத்துக் கொள்ளாதபோது, அதன் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்காகக் காத்திருக்கிறோம் என்று சொல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.
> முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்காக திருமதி. சாந்தா ஷீலா நாயர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பின்னர் திரு. ஸ்ரீதர் அவர்கள் தலைமையேற்று தயாரித்த அறிக்கையானது, மிகப் பெரிய போராட்டம் நடத்தி, அந்த போராட்ட வழக்கானது நீதிமன்றம் வரை சென்ற பின்னரே, முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி திரு. பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, தமிழ்நாடு அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. திராவிட மாடல் அரசு, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது என்று சொன்னாலும், அந்த அறிக்கையினைக் கூட இதுநாள்வரை பொதுவெளியில் வெளியிடாமல் அந்த அறிக்கையின் இரகசியத்தினை பாதுகாத்து வருகிறது.
> பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு, இதுவரை இத்திட்டத்தில் சேர்ந்த பணியாளர்களில் பணிஓய்வு / இறப்பு / பணித் துறப்பு / பணிநீக்கம் ஆகியவற்றில் சென்றை ஏறத்தாழ 40,000 பணியாளர்களுக்கு திட்டத்தின் பெயரிலேயே சொல்லப்பட்ட ஓய்வூதியம் என்பது ஒரு நயா பைசாக்கூட வழங்கப்படவில்லை என்பது என்பது வேதனையிலும் வேதனை.
அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதோடு மட்டுமல்லாமல், முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் மாண்புமிகு டாக்டர் டாக்டர் கலைஞர் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சரண் விடுப்புச் உரிமையினையும் காலவரையின்றி முடக்கி வைத்துள்ளது இந்த அரசு. காலவரையின்றி முடக்கம் என்பதை இனி ஒருபோதும் இல்லை என்பதைத்தான் நாங்கள் குறிக்கிறோம் என்று தமிழ்நாடு அரசு தற்போது தெள்ளத் தெளிவாகி விட்டது. > இதோடு மட்டுமல்லாமல், 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்றபோது இருந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையான 4.5 இலட்சத்தில் எள்ளவும் மாற்றமின்றி அதே எண்ணிக்கை தொடர்கிறது. அதிலும், குரூப் டி என்று அழைக்கப்படுகின்ற சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் அரசு வேலைவாய்ப்பு கனவு என்பது முற்றாக சிதைக்கப்பட்டு, அவுட்சோர்சிங், கான்டிராக்ட், கன்சல்டன்ட் என்ற புதுப்புது வார்த்தை ஜாலங்களால் அப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு, இந்திய அரசியல் சாசனத்தால் பாதுகாக்கப்பட்ட தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது திராவிட மாடல் ஆட்சியில் உருத் தெரியாமல் சிதைக்கப்பட்டு விட்டது. விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றம் என்பது கானல் நீராகிவிட்டது.
> சட்டமன்றத் தேர்தலின்போது அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின்மீது கரிசனம் வருவதும் ஆட்சிக்கு வந்தபின்னர் அவர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிப்பதும் வாடிக்கையாகி விட்டது. இத்தருணத்தில் ஆப்பிரகாம் லிங்கனின் வரிகளான “சிலரை சில நேரங்களில் ஏமாற்றலாம்; பலரை பல நாட்களில் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களிலும் ஏமாற்ற முடியாது” என்பதை அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மறக்க மாட்டார்கள்.
மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களின் 11.01.2025 அன்றைய அறிவிப்பினைக் கண்டித்தும் 2021 தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு வழங்குவது மற்றும் அரசுப் பணியிடங்களில் காலியாகவுள்ள 4.5 இலட்சத்திற்கும் மேலான காலிப் பணியிடங்களை நிரப்பிடுதல் ஆகியவற்றை திராவிட மாடல் அரசின் ஐந்தாவது மற்றும் 2021-2026 ஆட்சிக் காலத்தின் இறுதி பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சார்பாக 24.01.2025 பிற்பகல் 1.30 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்தில் உணவு இடைவேளை கூட்டம் நடைபெறும்.
👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கண்டன அறிக்கை PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.