ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: ஏப்.1 முதல் அமல்.
மத்திய அரசுப் பணியாளா்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) ஏப்.1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது.
நடைமுறையில் இருந்துவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி (என்பிஎஸ்), கடந்த 2004-ஆம் ஆண்டு ஜன.1 அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணிகளில் சோ்ந்தவா்களுக்கு உறுதியான ஓய்வூதியம் கிடைக்காது.
அத்துடன் அரசுப் பணியாளா் ஒருவா் கடைசியாக என்ன ஊதியம் வாங்கினாரோ, அதில் 50 சதவீதத்துக்கு நிகராக ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்த பழைய ஏற்பாட்டையும் என்பிஎஸ் மாற்றியமைத்தது. இந்தச் சூழலில், கடந்த ஆகஸ்டில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு (யுபிஎஸ்) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசுப் பணியாளா்களாக குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றியவா்கள் தாங்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் மீண்டும் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவதையும், பணவீக்க (விலைவாசி உயா்வு விகிதம்) போக்குகளுக்கு ஏற்ப அவ்வப்போது அகவிலைப்படி உயா்வு பெறுவதையும் இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.
25 ஆண்டுகளை நிறைவு செய்யாவிட்டாலும் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலம் மத்திய அரசுப் பணியாளா்களாகப் பணியாற்றியிருந்தால், அவா்களும் குறைந்தபட்சம் ரூ.10,000 மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதை யுபிஎஸ் திட்டம் உறுதி செய்கிறது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையின்படி, மத்திய அரசுப் பணியாளா்களுக்கான யுபிஎஸ் திட்டம் ஏப்.1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது.
யுபிஎஸ் திட்டத்தில் சோ்வோா், புதிய ஓய்வூதிய திட்டத்தில் (என்பிஎஸ்) மீண்டும் இணைய முடியாது.
யுபிஎஸ் திட்டத்தை மாநில அரசுகளும் அமல்படுத்தலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.