Cancellation of compulsory passing system for 5th and 8th grade... What are the consequences? - A look - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 25, 2024

Cancellation of compulsory passing system for 5th and 8th grade... What are the consequences? - A look



Cancellation of compulsory passing system for 5th and 8th grade... What are the consequences? - A look 5, 8-ம் வகுப்பு கட்டாய தேர்ச்சி முறை ரத்து... விளைவுகள் எத்தகையது? - ஒரு பார்வை

மத்திய அரசுப் பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் நல ஆர்வலர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பினரும் இது குறித்து தங்களின் கருத்துகளை முன்வைக்கின்றனர். எதிர்ப்புக் குரல்களைப் போலவே கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சியை முடக்கக் கூடாது என்ற ஆதரவுக் குரலும் இருக்கின்றது.

மத்திய அரசு அறிவிப்பின் விவரம் என்ன? - இத்தனை சர்ச்சைகளை உருவாக்கிய திருத்தத்தை பற்றி முதலில் அறிந்து கொள்வோம். கல்வி உரிமைச் சட்டத்தில் 2019-ம் ஏற்பட்ட திருத்தம் மூலம் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், கட்டாயத் தேர்ச்சி கொள்கையில் மீண்டும் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டின் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்களுக்கு இரண்டு மாதத்துக்குள் மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தோல்வி அடையும் பட்சத்தில் மீண்டும் அதே வகுப்பிலேயே தொடர்வார்கள். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் கூடுதல் வழிகாட்டுதலை வழங்குவார்கள். இருப்பினும், தொடக்கக் கல்வியை முடிக்கும் முன்னர் எந்த மாணவர்களும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய விதிமுறைகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், சைனிக் பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த புதிய கல்வி விதிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முடிவை சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் மத்தியக் கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதைப் பின்பற்றி, கட்டாய தேர்ச்சி முறையை புதுச்சேரி அரசு இப்போது ரத்து செய்துள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது. கல்வி இடைநிற்றலுக்கு வழிவகுக்கும்... - மத்திய அரசின் இந்த உத்தரவு குழந்தைகளின் கல்வி இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்துகள் மேலோங்கி வருகின்றன. அந்தக் குரல்களின் வரிசையில் சிறார் நூல் எழுத்தாளரும், தேசிய கல்விக் கொள்கையின் வரைவு, இறுதி அறிக்கைகளை தமிழாக்கம் செய்து பொதுவெளியில் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் பகிர்ந்தவருமான விழியன் கூறியதாவது: “இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) 2009, இயற்றப்பட்டது. அதில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்படுகின்றன. ஒரு திருத்தம் கொண்டுவரும் போது அதற்கான தேவை இருப்பின் கொண்டுவருவதே சரியானதாக, நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும்.

ஆர்டிஇ இயற்றப்பட்டு 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்போது குழந்தைகளின் தரநிலைகளின்படி கற்றல் இடைவெளி இருக்கிறதா? கரோனா பெருந்தொற்று காலத்தில் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்தோர் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைப் பள்ளிகளில் மீண்டும் எந்த அளவுக்கு சேர்க்கப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளதா உள்ளிட்ட பல்வேறு காரணிகளும் கணக்கிடப்பட்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து புள்ளிவிவரங்கள் ஏதேனும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இத்தகைய நிலையில் திருத்தம் செய்ய வேண்டுமே என்று திருத்துவது ஏற்புடையது அல்ல.

இந்த அறிவிப்பு, ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்வுகள் நடத்தப்படும் அந்த தேர்வில் தோல்வியுற்றால் அடுத்த வகுப்பிற்கு அனுப்பமாட்டார்கள். - இரண்டு மாதங்களுக்கு பின்னர் மறுதேர்வு நடக்கும் அதிலும் தோல்வி எனில் அதே வகுப்பில் தொடர்வார்கள். இது தற்சமயம் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளுக்கு பொருந்தும் எனத் தெரிவிக்கிறது.

8-ம் வகுப்பில் 10 மாணவர்கள் தோல்வி அடைகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதில் 8 பேர் திரும்பவும் பள்ளிக்கு வரலாம். இருவர் பள்ளிக் கல்வியை நிறுத்திவிட்டு விட்டேத்தியாக சுற்றலாம், இல்லை குழந்தை தொழிலாளராக மாறலாம். ஏற்கெனவே கரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகளில் இருந்து இடைநின்றவர்களைத் தேடித் தேடி மீண்டும் பள்ளியில் சேர்க்கும் முயற்சிகள் ஓரளவு ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த புதிய அறிவிப்பால், ஐந்தாம் வகுப்பில் நிறைய இடைநிற்றலும் எட்டாம் வகுப்பில் இன்னும் நிறைய இடைநிற்றலும் நிகழும். அதுவும் முதலாம் இரண்டாம், மூன்றாம ் தலைமுறையாக கல்வி பயிலும் குடும்பங்களில் இது நிகழும். ஒட்டுமொத்தத்தில் கட்டாய தேர்ச்சி ரத்து மாணவர்கள் நலனை பின்னோக்கி இழுக்கும்.

“தமிழகத்தில் செயல்பட்டுவரும் மத்திய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும்” என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளதை விழியனிடம் சுட்டிக்காட்டி வினவிய போது, “கர்நாடகத்தில் 5, 8, 9, 10 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பதைக் கொண்டு வந்தாலும் உயர் நீதிமன்றம் அதனை நிறுத்திவைத்துள்ளது. தமிழகத்தில் கறாரான பொதுத்தேர்வு என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் தேர்வுகள் நடக்கின்றன. அடுத்த வருடத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை. இது அரசுப் பள்ளிகளுக்கும் எப்போது வேண்டுமானால் நீளும் ஆபத்து இல்லவே இல்லை எனக் கூறிவிட முடியாது. மேலும், ஆர்டிஇ மூலம் அருகில் இருக்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் அதிகம் எனலாம். ஒருவேளை பள்ளியே தேர்வு நடத்தி மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க வேண்டிய நிலையில் இருந்தால் பள்ளிகள் நிச்சயம் 25 சதவீத இடஒதுக்கீட்டில் வந்தவர்களை வெளியேற்ற முயற்சிக்காது என்று என்ன உத்தரவாதம் இருக்கிறது. எனவே, என்னைப் பொறுத்தவரை இது கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சியாகவே நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்” என்றார்.

இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஆர்டிஇ சட்டத்தை இத்தகைய திருத்தங்கள் நீர்த்துப் போகச் செய்யும் என்றே பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறுகிறார்.

‘அடிப்படை உரிமைகளை பறிக்காமல், தடுக்காமல் இருந்தால் போதும்’ - தமிழகத்தில் 19 ஆண்டுகளாக ஆசிரியராக இருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத பெண் ஆசிரியர் ஒருவர் மத்திய அரசின் சட்டத் திருத்தம் பற்றி கூறுகையில், “தொடக்கக் கல்வி, நடுநிலைக் கல்வியையும் பெற்றிருக்கும் குழந்தைகளின் சதவீதம் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். அதேபோல் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும். இடைநிற்றல் என்பது ஒற்றைச் சிக்கல் அல்ல. இதனால் குழந்தை தொழிலாளர்கள், குழந்தை திருமணங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியமற்ற இளம் தலைமுறை உருவெடுக்கும். உடல் ரீதியாக, மன ரீதியாக ஆரோக்கியமற்ற இளம் தலைமுறை எப்படி ஆரோக்கியமான தனக்கான அரசைத் தேர்ந்தெடுக்க முடியும். உதாரணத்துக்கு ஒரு பின்தங்கிய குழந்தைத் திருமணங்கள் நிறைந்த மலை கிராமத்தில் கற்கும் மாணவர்களின் நிலையை சுட்டிக் காட்டுகிறேன். குழந்தை திருமணம் மூலம் பிறந்த குழந்தைகள் என்பதாலேயே இயல்பிலேயே ஆரோக்கிய குறைபாட்டுடன் தான் அக்குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களில் பலரும் மெதுவாகவே கல்வி கற்கின்றனர். அப்படியான குழந்தைகளை 5-ம் வகுப்பில் ஒருமுறை, 8-ம் வகுப்பில் ஒருமுறை என்று வடிகட்டினால் அவர்களுக்கு கற்றலில் என்ன நாட்டம் வரும்?

இத்தகைய திட்டமெல்லாம் பாஜகவின் விஸ்கர்மா திட்டம் போன்ற திட்டங்களை ஊக்குவிக்கும். உனக்கு இயல்பாகவே உன்னுடைய தந்தையின் திறமை மரபு ரீதியாக கடத்தப்பட்டிருக்கும் என்று நம்பவைத்து குலத் தொழிலை ஊக்குவிக்கும். இட ஒதுக்கீடுகள் நீர்த்துப் போகும் ஏன் பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 90% ஆனாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கல்வி என்பது அரசமைப்பு சட்டம் கொடுத்த அடிப்படை உரிமையாக இருக்கும் பட்சத்தில் அதை யாரும் யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உரிமையை பறிக்காமல், தடுக்காமல் இருந்தாலே போதும். ஆசிரியர்களையும், கல்வித் தரத்தையும் மேம்படுத்துதல் என்பது மாணவர்களுக்கு நெருக்கடி தருவது அல்ல, அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை உருவாக்குவது. கல்விக்கு நிதி மறுப்பு, கல்விக்கான நீதியும் பறிப்பு என்றால் யார் தான் படிப்பது. ஆர்டிஇ சலுகை வழியாக நுழையும் குழந்தைகளின் உரிமையைப் பறிக்கும் முயற்சி. யுஜிசி தொடங்கி தொடக்கக் கல்வி வரை எல்லா இடங்களிலும் யார் படிக்க வேண்டும் என்பதை யாரோ சிலர் நிர்ணயிப்பார்கள்?” என்றார். கல்வியின் தரத்தை உயர்த்தவே.. - எதிர்ப்புகள் பல முனைகளில் இருந்து கிளம்பினாலும், தமிழக பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை கல்வித் தரத்தை உயர்த்தவே ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது எனக் கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்துள்ளது. ஆனால் கேரளா, தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் கல்வித் தரம் அதிகரித்துள்ளது.

எத்தனை பேர் படிக்கின்றனர் என்பது முக்கியமல்ல; எத்தனை பேர் தரமான கல்வியைப் பெறுகின்றனர் என்பதே முக்கியம். தமிழகத்தில் தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட சில இடங்களில் என்சிஆர்டி குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை சேகரித்துள்ளனர். மாணவர்களுக்கு அடிப்படை அறிவியல், அடிப்படை கணிதம், வாசித்தல் திறன் எ ப்படி இருக்கிறது என்பதை அவர்கள் சோதித்துள்ளனர். அனவே, கல்வித் தரத்தை உயர்த்தவே ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது” என்று மத்திய அரசின் குரலாக ஒலித்துள்ளார் அண்ணாமலை.

கல்வியின் தரம் உயர்த்த இது அவசியம் என்று இத்திட்டத்தை ஆதரிப்போர் சொல்லும் நிலையில், “இப்போது கல்வியின் தரம் எப்படி இருக்கிறது என்ற தெளிவான தரங்களையும் அவர்களே பட்டியலிட்டால் விவாதத்துக்கு உட்படுத்த தோதாக இருக்கும். கல்வியில் முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கும் தமிழகமே எதிர்க்கும் போது பின் தங்கிய மாநிலங்களும் இதனை எதிர்க்க வேண்டும். கல்வி மாநில உரிமை என்ற கோஷத்தை வலுவாக திரண்டு முன்வைக்க வேண்டும்” என்று சமூக நல ஆர்வலகள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.