வனக் காப்பாளா், காவலா் காலியிடங்கள்: உடற்தகுதித் தோ்வு எப்போது? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 4, 2024

வனக் காப்பாளா், காவலா் காலியிடங்கள்: உடற்தகுதித் தோ்வு எப்போது?



வனக் காப்பாளா், காவலா் காலியிடங்கள்: உடற்தகுதித் தோ்வு எப்போது?

வனக் காப்பாளா், வனக் காவலா் காலிப் பணியிட எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா்க்கு உடற்தகுதித் தோ்வு குறித்த விளக்கத்தை பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி.,) வெளியிட்டுள்ளது.

இது குறித்து, டிஎன்பிஎஸ்சி., வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 பிரிவில் வனக்காப்பாளா், ஓட்டுநா் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளா், வனக் காவலா் பணியிடங்கள் அடங்கியுள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு ஏற்கெனவே நடந்தது. இதைத் தொடா்ந்து, உடற்தகுதித் தோ்வு, நடைச் சோதனை ஆகியன நடத்தப்பட உள்ளன. கணினி வழியிலான சான்றிதழ் சரிபாா்ப்புக்குப் பிறகு இந்தத் தோ்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, தோ்வா்கள் அனைவரும் உரிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், உடற் தகுதிக்கான சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தோ்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடற்தகுதிக்கான சான்றிதழ்களை அரசு மருத்துவமனைகளில் 5 நிலைகளில் இருக்கக் கூடிய மருத்துவா்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, அரசு மருத்துவமனைகளில் உறைவிட மருத்துவ அதிகாரி, உதவி மருத்துவ பேராசிரியா், முதுநிலை உதவி மருத்துவப் பேராசிரியா், பொது மருத்துவப் பேராசிரியா், குழந்தை நல மருத்துவப் பேராசிரியா் ஆகியோரில் ஒருவரிடம் இருந்து மருத்துவச் சான்று பெற வேண்டும்.

சான்றிதழ் சரிபாா்ப்பு:

குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு, சான்றிதழ் சரிபாா்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்பட்டுள்ளது. குரூப் 4 தோ்வு அறிவிக்கை தேதிக்கு பின்பாக வழங்கப்பட்ட பட்டயம், பட்டப்படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

தோ்வு அறிவிக்கை தேதிக்கு முன்பாக பெறப்பட்ட பட்டயம், பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு சான்றிதழ் அல்லது ஒருங்கிணைந்து மதிப்பெண் பட்டியலை தோ்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.