பிளஸ் 2 பொதுத் தோ்வு கட்டணம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 19, 2024

பிளஸ் 2 பொதுத் தோ்வு கட்டணம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்.



பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டணம்.. தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.. யாருக்கு விலக்கு?

2024-25ம் கல்வியாண்டுக்கான, மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்கள் இன்று நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை இணைய வழியில் டிசம்பர் 10ம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2024- 2025ம்‌ கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்‌ கட்டணம்‌ மற்றும்‌ டிஎம்எல் கட்டணத்தை ஆன்‌லைன்‌ வழியாக செலுத்துதல்‌ தொடர்பாக அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.‌

மாணவர்கள்:

இதுதொடர்பாக அனைத்து மேல்நிலைப்‌ பள்ளி தலைமையாசிரியர்களுக்கும்‌ அறிவுறுத்துமாறு முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை மாலை 5 மணிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வு இயக்குநரகம் செய்திக்குறிப்பில் உள்ளதாவது: நடப்பு (2024-25) கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டண தொகையை பெற்று, ஆன்லைனில் டிசம்பர் 10-ம் தேதிக்குள் செலுத்துமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். செய்முறை பாடங்கள் கொண்ட மாணவர்களுக்கு ரூ.225, செய்முறை பாடங்கள் இல்லாத மாணவர்களுக்கு ரூ.175 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விலக்குகள்:

இதில், தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிசி பிரிவினருக்கும், பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பிசி, பிசி-எம் பிரிவினருக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது. 11-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வு கட்டண தொகையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 20-ம் தேதி முதல் செலுத்தலாம். ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்படும்.

ஆன்லைன் கட்டணம்:

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அடங்கிய அட்டவணை வடிவிலான மதிப்பெண் பட்டியலை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய, அனைத்து பள்ளிகளும் ரூ.300 செலுத்த வேண்டும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரை தலைமை ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.