பள்ளியில் வளைகாப்பு நடத்தி மாணவிகள் ரீல்ஸ் - கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 20, 2024

பள்ளியில் வளைகாப்பு நடத்தி மாணவிகள் ரீல்ஸ் - கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை



பள்ளியில் வளைகாப்பு நடத்தி மாணவிகள் ரீல்ஸ் - கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

வேலுாரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இந்த பழக்கத்துக்கு ஆளான மாணவிகள், பள்ளி வளாகத்தில் சக மாணவிக்கு வளைகாப்பு விழா நடத்தி ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தனர். இந்த விழாவுக்கு அழைப்பிதழையும் வடிவமைத்து அதில் பகிர்ந்தனர். இந்த விவகாரம் வேலூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் மோகன் சம்பந்தம்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் வீடியோ வெளியிட்ட மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

அப்போது மாணவிகள் தெரியாமல் செய்து விட்டோம் என கூறினர்.

இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களுடன் ஆன்லைன் மூலம் அவசர கூட்டம் நடந்தது.

இதில் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:-

பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் புத்தகப்பைகளில் கத்தி, செல்போன் போன்று தேவையில்லாத பொருட்கள் எடுத்து வருகிறார்களா என்பதை தினமும் சோதனை செய்ய வேண்டும். வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றிருந்தால், அவர்களின் வகுப்பறையில் வேறு ஆசிரியர் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் ஏதாவது நேர்ந்தால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களே பொறுப்பு என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர் ஓய்வு அறைக்கு செல்லாமல், வகுப்பறைகளிலேயே அமர்ந்து சாப்பிட வேண்டும்.

மேலும் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் எந்த காரணத்தை கொண்டும் செல்போன்கள் எடுத்து வர கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உத்தரவுகளை இன்று முதலே பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.