மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் இடமாற்றம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 18, 2024

மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் இடமாற்றம்



மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் இடமாற்றம்

அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்ம் 28-ம் தேதி தன்னம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு சொற்பொழிவு வழங்கிய விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் 2 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதனுடன் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவந்தது.

அதன்படி அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் எஸ்எம்சி உறுப்பினர்களிடம் நிகழ்ச்சி தொடர்பாக இயக்குநர் குழு விசாரணை நடத்தியது. நிகழ்ச்சிக்கு மகாவிஷ்ணுவை யார் பரிந்துரை செய்தது, அதற்கு முன்அனுமதி பெறப்பட்டதா என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையானது தமிழக அரசிடம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அ.மார்ஸ் ஒப்புதலின் பெயரிலேயே இந்த 2 அரசுப் பள்ளிகளிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. பள்ளிகளில் இத்தகைய செயல்பாடுகளுக்கு அனுமதி பெறுவது உறுதிப்படுத்தப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தன. அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தற்போது சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் மீது பணியிட மாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் தஞ்சை சரபோஜி மன்னர் நூலகத்தின் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல், சென்னை மாவட்டத்துக் புதிய முதன்மைக் கல்வி அதிகாரியாக இதற்குமுன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய ஏஞ்சலோ இருதயசாமி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.