UPS Unified Pension Scheme - ஓய்வூதியத் திட்டம் நமக்கு பொருந்தாது - CPS ஒழிப்பு இயக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 26, 2024

UPS Unified Pension Scheme - ஓய்வூதியத் திட்டம் நமக்கு பொருந்தாது - CPS ஒழிப்பு இயக்கம்



UPS ஓய்வூதியத் திட்டம் நமக்கு பொருந்தாது - CPS ஒழிப்பு இயக்கம்

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்று சொல்லும் திராவிட மாடல் அரசே ... தொடர்ச்சியாக தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை வஞ்சிக்கும் தமிழக அரசே உடனடியாக CPS திட்டத்தை ரத்து செய் .....

ஒன்றிய அரசின் நேற்றைய அறிவிப்பு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவில்லை . மாறாக புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகும். பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்று பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே. இந்த ஓய்வூதியத் திட்டம் ( UPS ) தமிழ்நாட்டில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பொருந்தாது . தமிழ்நாட்டின் நிதியமைச்சர் திரு . தங்கம் தென்னரசு அவர்கள் " ஒன்றிய அரசு நிதித்துறை செயலாளர் திரு . T.V. சோமநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட உத்திரவாத ஓய்வூதியத் திட்டம் ஆகிய இரண்டில் எது சிறந்தது என்பதை மாண்புமிகு தமிழக முதல்வருடன் கலந்து பேசி தமிழக அரசு முடிவு செய்யும் " என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார் . எனவே , தமிழ்நாடு நிதியமைச்சர் காலம் தாழ்த்தாமல் ஏற்கனவே தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தமிழக முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் .

2024 பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக அரசிற்கு ஏற்பட்ட பின்னடைவு மற்றும் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு , ஆந்திராவில் நடைமுறைப்படுத்தப்பட்ட உத்திரவாத ஓய்வூதியத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ( UPS ) அறிவித்துள்ளது .

இந்திய தேசம் முழுமையும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இணைந்த ஒன்றுபட்ட விடாப்பிடியான தொடர் போராட்டங்களின் விளைவாக இராஜஸ்தான் , ஜார்கண்ட் , சட்டீஸ்கர் இமாசலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் துடைத்தெறியப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. ஓய்வூதியம் , குடும்ப ஓய்வூதியம் , பணிக்கொடை உள்ளிட்ட எவ்வித ஓய்வுகால பலன்களும் இல்லாத CPS திட்டத்தை முழுமையாக இரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திட தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.