அமெரிக்காவில் ரூ.3 கோடி உதவித்தொகை: சென்னை மாணவி சாதனை!
வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கப் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டுமா? பெரும்பாலும் செலவு செய்ய வேண்டும் என்கிற சூழல்தான் என்றாலும் திறமையும் முயற்சியும் இருந்தால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உதவித்தொகையுடன் உயர்கல்வி படிப்பது சாத்தியமாகலாம். திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் பிஐடி வளாகத்தில் (BIT Campus, Anna University, Trichy) இளங்கலை படித்துக்கொண்டிருந்தபோதே அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகத்தில் நேரடி முனைவர் பட்டத்துக்கான படிப்பில் சேர ரூ.3 கோடி உதவித்தொகையைப் பெற்று அமெரிக்கா பயணிக்க உள்ளார் சென்னையைச் சேர்ந்த நித்யஸ்ரீ.
கனவு நனவானது எப்படி?
பி.டெக். படிப்பு தொடங்கியபோதே நேரடி முனைவர் படிப்பில் சேரத் தேவையான தகுதியை வளர்க்க ஆயத்தமானார் நித்யஸ்ரீ. ‘டெக்னோகிராட்ஸ் இந்தியா காலேஜ் ஃபைண்டர்’ என்கிற அமைப்பின் வழிகாட்டுதலுடன் பி.டெக் படிப்பின்போது பயிற்சிகளில் சேர்வது, இணையவழிச் சான்றிதழ் படிப்புகளில் தேர்ச்சி பெறுவது, படிப்பைத் தாண்டி விளையாட்டு, நிர்வாகம் போன்றவற்றில் திறன்களை வளர்த்துக்கொள்வது எனத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டார்.
முதுகலைப் பட்டப்படிப்பு இல்லாமல் நேரடி முனைவர் பட்டம் படிப்பதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன என்கிற கேள்வியை நித்யஸ்ரீயின் முன்வைத்தோம். “நேரடி முனைவர் பட்டத்துக்கான படிப்பைப் பற்றிப் பலருக்குத் தெரிவதில்லை.
இளங்கலை படிக்கும்போதே படிப்பிலும் கூடுதல் திறன்களை மெருகேற்றிக்கொள்வதிலும் கவனம் செலுத்தினால் நேரடி முனைவர் படிப்புக்கான வாய்ப்புகளைப் பெறலாம்.
இது சவாலான காரியம்தான் என்றாலும் முதுகலைப் படிப்பை முடிக்க ஆகும் காலத்தை நேரடி முனைவர் பட்டத்துக்காகப் பயன்படுத்தலாம் என்பதால் இரண்டு ஆண்டுகளை மிச்சப்படுத்தலாம்.
ஆராய்ச்சிப் படிப்பின்போது படிப்பு, செயல்திறன் என இரண்டையும் வளர்த்துக்கொள்ள முடியும். இது நல்ல வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும்.
ஆனால், முதுகலைப் படிப்பைத் தவிர்த்துச் செல்வதால், ஆராய்ச்சிப் படிப்பு சற்று கடினமானதாகத் தோன்றலாம்.
வழக்கத்தைவிட இரு மடங்கு கூடுதலாக உழைக்க வேண்டியது அவசியம்” என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.