புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரூ.1 கூட முன்பணம் பெற முடியாது - நிதிச்செயலர் பதிலால் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கொதிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 5, 2024

புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரூ.1 கூட முன்பணம் பெற முடியாது - நிதிச்செயலர் பதிலால் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கொதிப்பு

புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து ரூ.1 கூட முன்பணம் பெற முடியாது நிதிச்செயலர் பதிலால் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கொதிப்பு

வேடசந்துார்,:2003 க்கு பிறகு தமிழக அரசில் நியமனம் பெற்ற அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கிலிருந்து மருத்துவ செலவுக்கு ரூ.1 கூட முன்பணம் பெற வழியில்லை என தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் பதில் வழங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 1.4.2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்திய அளவில் 20 ஆண்டுகளாக புதிய ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட நிதியை மாநில அரசே வைத்திருப்பது தமிழகத்தில் மட்டும்தான். மற்ற மாநிலங்களில் பிடித்தம் செய்யப்பட்ட நிதியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வகிக்கிறது. பிடித்தம் செய்யப்பட்ட நிதியிலிருந்து மருத்துவ சிகிச்சை, குழந்தைகளின் கல்விக்கு முன்பணம் பெற முடியும். ஆனால் தமிழகத்தில் நிதியை அவசர தேவைக்கு கூட நிதி பெற முடியாத நிலை நீடிக்கிறது.

திண்டுக்கல்லை சேர்ந்த ஆசிரியர் விக்டர் என்பவர் தனது தாயாரின் மருத்துவ செலவுக்காக தான் செலுத்திய பங்களிப்பு நிதியிலிருந்து முன் பணம் கோரி தமிழக அரசுக்கு விண்ணப்பம் செய்திருந்தார். பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கின் இருப்பில் உள்ள தொகையில் இருந்து பணம் வழங்க விதிகளில் வழி இல்லை என பதிலளித்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் விண்ணப்த்தை நிராகரித்துள்ளார். இதனால் அரசு ஊழியர் , ஆசிரியர்கள் 20 ஆண்டுகளாக செலுத்திய நிதியிலிருந்து மருத்துவ செலவுக்காக சிறு தொகையை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பி.பிரடெரிக் ஏங்கல்ஸ், மாநில ஒருங்கிணைப்பாளர், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம், வேடசந்துார்:

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்த 6.50 லட்சம் பேர் திரிசங்கு நிலையில் உள்ளனர். இந்தியாவில் 7 மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்றனர். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் இன்று வரை செயல்படுத்த முன் வரவில்லை.

இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்த 30 ஆயிரம் பேர் இறந்தும், ஓய்வு பெற்றும் உள்ளனர். அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் இல்லை. ஆளும் தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.