ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு 'கட்' தேர்தல்நேர நடவடிக்கையால் கொந்தளிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 14, 2024

ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு 'கட்' தேர்தல்நேர நடவடிக்கையால் கொந்தளிப்பு



ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு 'கட்' தேர்தல்நேர நடவடிக்கையால் கொந்தளிப்பு Teacher salary hike 'cut' stirs uproar over election-time move

மறுமதிப்பீட்டில் மதிப்பெண் வித்தியாசம்: ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு 'கட்' தேர்தல்நேர நடவடிக்கையால் கொந்தளிப்பு

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான மறுமதிப்பீட்டின் போது மாறுபட்ட மதிப்பெண்கள் காணப்பட்ட விடைத்தாள்களை திருத்திய நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு ஓராண்டு சம்பள உயர்வை நிறுத்தி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதால் ஆசிரியர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

கல்வித்துறையில் 2022, 2023 ஆண்டுகளில் நடந்த மேல்நிலைத் தேர்வுகளுக்கான மறுமதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அப்போது மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மாறுபட்ட மதிப்பெண்கள் வழங்கப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கான உரிய விளக்கங்களை ஆசிரியர்கள் அளித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தாண்டு முடிந்த பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளில் ஆயிரக்கணக்கான ஈடுபட்டுள்ளனர். இதில் 2022, 2023 ஆண்டுகளில் பங்கேற்று விளக்கம் அளித்த ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் மாறுபட்ட மதிப்பெண் வழங்கிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு தனித் தனியே கல்வித்துறை நோட்டீஸ் அளித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக மாறுபட்ட மதிப்பெண் வித்தியாசம் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஓராண்டு சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் பதவி உயர்வு உள்ளிட்ட நிலைகளில் கடும் பாதிப்பு ஏற்படும். தேர்தல் நேரத்தில் ஆசிரியர்கள் மீதான இந்த நடவடிக்கையால் அவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. மன உளைச்சல்

இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் கார்த்திகேயன் கூறியதாவது:

மனித தவறுகளால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு எச்சரிக்கை அல்லது கண்டனம் தெரிவிக்கப்படும். ஆனால் பணப் பலன் பாதிக்கும் வகையில் முதல்முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை கடுமையாக கண்டிக்கிறோம்.

பெரும்பாலான விடைத்தாள் திருத்தும் முகாம்களில் ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை.

பல இடையூறுகளுக்கு இடையே தான் மதிப்பிடும் பணிகளை செய்கிறோம்.

இந்த நடவடிக்கை மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் விடைத்தாள் திருத்தும் முகாம்களில் ஆசிரியர்கள் பங்கேற்க தயங்குவர். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.