முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு எதிரொலி: ஜாக்டோ - ஜியோ ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு வாபஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 14, 2024

முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு எதிரொலி: ஜாக்டோ - ஜியோ ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு வாபஸ்

முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு எதிரொலி: ஜாக்டோ - ஜியோ ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு வாபஸ்



10 அம்ச கோரிக்கைகளைப் வலியுறுத்தி நாளை நடைபெறவிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்படுவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

பழைய ஓய்வு புதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் போராட்டம் அறிவித்திருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன் இரண்டு கட்ட ஆலோசனைகள் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், நிதிநிலைமை சீரான உடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சந்திப்பு

இது தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஸ் ஆகியோர் ஒரு முறையும், எ.வ.வேலு, முத்துசாமி, தங்கம் தென்னரசு ஆகியோர் ஒரு முறையும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

நேற்று இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு இருந்த தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசின் நிதிநிலை சீரான உடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்திருந்தார். எனவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால், ஊதியம் கிடையாது என்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள வாக்குறுதிகளின் அடிப்படையில் முதல்வருடன் அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவித்தனர். எனவே நாளை நடைபெற உள்ள அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இருப்பினும் சுமார் 10 ஆண்டு காலமாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிதிநிலை சீரானவுடன் தங்களுக்கு நிறைவேற்றி தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.