அரசுப்பணியாளர்களுக்கான உடை கட்டுப்பாடு அரசாணை (எண்:67) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 9, 2023

அரசுப்பணியாளர்களுக்கான உடை கட்டுப்பாடு அரசாணை (எண்:67)



அரசுப்பள்ளி ஆசிரியர்களும் இனி சேலை தவிர்த்த பிற ஆடைகளில் பள்ளிக்கு வரலாம்

அரசுப்பணியாளர்களுக்கான உடை கட்டுப்பாடு அரசாணை, ஆசிரியைகளுக்கும் பொருந்தும் பட்சத்தில், சில கல்வித்துறை அதிகாரிகள், சுடிதார் அணிந்து வர தடை விதிப்பதாக, புகார் எழுந்துள்ளது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில், வழிகாட்டி நெறிமுறை வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழக அரசு 2019 ஜூன் மாதம், அரசுப் பணியாளர்களுக்கான உடைக்கட்டுப்பாடு குறித்த அரசாணை (எண்:67) வெளியிட்டது. இதில், அலுவலக பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உடை அணிந்திருக்க வேண்டும்.பெண் பணியாளர்கள், சேலை, சல்வார் அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வரலாம். ஆண் பணியாளர்கள், பேன்ட்ஸ், சட்டை மற்றும் வேட்டி, சட்டையில் அலுவலகத்திற்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை, அனைத்து அரசு அலுவலக பணியாளர்களுக்கும் பொருந்தும் பட்சத்தில், பள்ளிக்கல்வித்துறை மட்டும் விதிவிலக்காக செயல்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, பெண் ஆசிரியர்கள் கட்டாயம் சேலை மட்டுமே அணிந்து வர வேண்டுமென, சில தலைமையாசிரியர்களும், ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும் நிர்ப்பந்திப்பதால், வீண் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, சமூக வலைதளங்களில், பெண் ஆசிரியர்கள் தங்களின் எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர்.உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் கையாளும் பெண் ஆசிரியர்கள், சேலை அணிந்து பள்ளிக்கு வருவது பாதுகாப்பற்ற சூழலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒழுங்கு மற்றும் நேர்த்தியான ஆடை அணிந்து வர, அனுமதி இருக்கும் பட்சத்தில், ஆசிரியைகள் மட்டும் சேலை கட்டாயம் அணிய கட்டுப்பாடு விதிப்பது ஏன், என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அரசாணையே போதும்

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளியிடம் கேட்டதற்கு, அரசுப்பணியாளர்களின் உடை கட்டுப்பாடு குறித்த அரசாணை உள்ளது. ஆசிரியர்களும் அரசுப்பணியாளர்களே என்பதால், பிரத்யேக வழிகாட்டுதல் வெளியிட வேண்டியதில்லை. அரசாணையை பின்பற்றி செயல்பட வேண்டும், என்றார்.

ஆக, அரசுப்பள்ளி ஆசிரியர்களும் இனி சேலை தவிர்த்த பிற ஆடைகளில் வலம் வரலாம்!

பணிசூழலுக்கேற்ற ஆடை

குழந்தைகள் மற்றும் பொது மனநல ஆலோசகர் கவிதா கூறுகையில், தனியார் பள்ளிகளில் ஆசிரியைகள் பெரும்பாலும் சுடிதார் தான் அணிகின்றனர். சேலை மேல் ஓவர்கோட் அணிகின்றனர். பெண் அரசுப்பணியாளர்களின் ஆடை, கட்டுப்பாட்டுக்கு அரசாணையே இருக்கும் பட்சத்தில், அதை பின்பற்றுவதில் தவறில்லை. அரசாணையை குறிப்பிட்டு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிடலாம். சேலையை விட, சுடிதார் தான் பலருக்கும் ஏற்ற உடையாக இருப்பதால், அதை அணிவதை தடுப்பது முரணாக உள்ளது, என்றார்.

- தினமலர் செய்தி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.