பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து பல்கலைகளுக்கும் விலக்கு தர வலியுறுத்தல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 16, 2023

பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து பல்கலைகளுக்கும் விலக்கு தர வலியுறுத்தல்!

பல்கலைகளுக்கும் விலக்கு தர வலியுறுத்தல்

தமிழக அரசின் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து, பல்கலைகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என, பேராசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், 13 அரசு பல்கலைகளின் இணைப்பில் செயல்படுகின்றன. இந்த பல்கலைகளில், தனித்தனி பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, இணைப்பு கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து அரசு பல்கலைகளிலும், பொதுவான பாடத்திட்டத்தையே அமல்படுத்தும்படி, தமிழக உயர்கல்வித் துறை கடந்த மாதம் உத்தரவிட்டது. இதற்கு, கல்லுாரி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்லுாரி நிர்வாகிகள் மத்தியில், எதிர்ப்பு எழுந்தது.

இதையடுத்து, தன்னாட்சி கல்லுாரி நிர்வாகிகளை அழைத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கருத்து கேட்டார். பெரும்பாலான கல்லுாரிகள் பொது பாடத்திட்டத்தை ஏற்கவில்லை.

எனவே, தன்னாட்சி கல்லுாரிகளுக்கு மட்டும் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதாக, தமிழக உயர்கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில், பல்கலைகளிலும் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என, கல்லுாரி பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து, கல்லுாரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் எம்.நாகராஜன் கூறியதாவது:

தன்னாட்சி கல்லுாரிகளுக்கு பொது பாடத்திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தன்னாட்சி கல்லுாரிகள், பல்கலைகளின் இணைப்பில் தான் செயல்படுகின்றன.

எனவே, பல்கலைகளும் வழக்கம்போல், தங்கள் கல்விக்குழு சார்பில் பாடத்திட்டம் தயாரித்து அமல்படுத்த வேண்டும். பொது பாடத்திட்டத்தை அரசு கட்டாயப்படுத்தக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சாத்தியமில்லை

பல்கலைகளும், தன்னாட்சி கல்லுாரிகளும், செனட், சிண்டிகேட், அகாடமிக் கவுன்சில் போன்ற அமைப்புகளுடன் இயங்குகின்றன. எனவே, அவற்றுக்கு பொதுவான ஒரே பாடத்திட்டம், சாத்தியமற்றது.

-- எஸ்.எஸ்.சுந்தரம், பொதுச் செயலர், சென்னை பல்கலை பேராசிரியர் சங்கம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.