கற்பித்த ஆசிரியர்களுக்கு பொற்காசு - பள்ளிக்கு ரூ.10 லட்சத்தில் கணினிகள் வழங்கிய முன்னாள் மாணவர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 15, 2023

கற்பித்த ஆசிரியர்களுக்கு பொற்காசு - பள்ளிக்கு ரூ.10 லட்சத்தில் கணினிகள் வழங்கிய முன்னாள் மாணவர்

கற்பித்த ஆசிரியர்களுக்கு பொற்காசு - பள்ளிக்கு ரூ.10 லட்சத்தில் கணினிகள் வழங்கிய முன்னாள் மாணவர்

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள நரிப்பள்ளியில் நடந்த அரசுப்பள்ளி விழாவில் முன்னாள் ஆசிரியர்களுக்கு பொற்காசு மற்றும் பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் 10 கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் சகுந்தலா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிற்றரசு, பொருளாளர் முருகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் வாசுகி சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தருமபுரி மாவட்டத்தின் கடைக்கோடியில் மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ளது இந்த நரிப்பள்ளி . மலைப்பகுதிகளையொட்டி அமைந்துள்ள கிராம பகுதியில் இருந்து படித்து சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் கிருஷ்ணகுமார்(47) இப்பள்ளியில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு வரை படித்தார். தற்போது சென்னையில் பணியாற்றி வரும், இவர் தான் படித்த பள்ளியில் தற்போது பயிலும் கிராமப்புற மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் 10 நவீன கணினிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் அன்பளிப்பாக அளித்துள்ளார். அதனை தான் பயின்றபோது தனக்கு கற்பித்த ஆசிரியர்களான தற்போது ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்கள் மணி, மாரியப்பன், சின்னப்பன், வடிவேல், சுப்பிரமணி, தங்கவேல், ராமசாமி, சாமிநாதன் ஆகியோர் மூலம் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு அளித்தார். இதனையடுத்து நடந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு தங்க காசுகள் பரிசாக வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தப்பட்டனர். நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகுமார் கூறுகையில், "தான் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் போது அங்குள்ள பள்ளிகள் கணினிமயமாக்கப்பட்டு நவீன மயமாக இருந்ததை கண்டு, அதேபோல் தான் பயின்ற கிராமப்புற பள்ளிக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தற்போது பத்து கணினிகள் வழங்கி உள்ளதாகும், இனிவரும் காலங்களில் வருடம்தோறும் பள்ளிக்கு வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்போவதாகவும்" தெரிவித்தார். இவ்விழாவில் ஆசிரியர்கள் பாரதிராஜா, சத்திய நாராயணன், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.