மாணவர்கள் பள்ளித்தூய்மைப் பணியில் ஈடுபடுவது மாபெரும் குற்றச்செயலா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 14, 2023

மாணவர்கள் பள்ளித்தூய்மைப் பணியில் ஈடுபடுவது மாபெரும் குற்றச்செயலா?



*மாணவர்கள் பள்ளித்தூய்மைப் பணியில் ஈடுபடுவது மாபெரும் குற்றச்செயலா?*

பொதுவாகவே அதிகப்படியான சுதந்திரம் ஆபத்தில் முடியும் என்று சொல்லப்படுவது உண்டு. சுதந்திரத்தில் கட்டுப்பாடும் கட்டுப்பாட்டிற்குள் சுதந்திரமும் தான் மனித வாழ்வில் இன்றியமையாதவை ஆகும். தனி மனித சுதந்திரத்திற்கும் ஓர் எல்லை உண்டு என்று வலியுறுத்தப்படுவது அறிந்த ஒன்றாகும். கல்வியானது ஒரு குழந்தைக்கு சுதந்திர உணர்வைத் தருகிறது. அதேசமயம் பொறுப்புணர்வையும் தனிநபர் ஒழுக்கத்தையும் பேணி வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.

அண்மைக்காலக் கல்வியின் நோக்கும் போக்கும் குழந்தைகளிடம் போதிய பொதிந்திருக்க வேண்டிய நல்லொழுக்கத்தையும் சமூகப் பொறுப்புணர்ச்சியையும் பேணி வளர்ப்பதில் உரிய உகந்த அக்கறை காட்டுகிறதா என்பது பெரிய கேள்வி. தன் சுத்தம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை பற்றிய விழிப்புணர்வின் அவசியம் குறித்த ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் மற்றும் அறிவுரைகள் குடும்பங்களில் நிகழ்த்தப்படுதல் இன்றியமையாதது. சுய ஒழுங்கும் கட்டுப்பாடும் ஒவ்வொரு குழந்தையும் கடைபிடிப்பது அவசியமாகும். குறிப்பாக, தம் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் வளரும் பிள்ளைகள் ஒவ்வொன்றும் தாமே நிறைவேற்றிக் கொள்ளுதல் வேண்டும். அல்லது குடும்பமும் பள்ளியும் அவற்றைப் பழக்குதல் வேண்டும். பள்ளிக்கல்வியின் அடிப்படை குறிக்கோள் குறைந்த பட்ச கற்றல் விளைவுகளுடன் நன்னடத்தை வளர்த்தல் ஆகும். குழந்தைகளைப் நல்ல பொறுப்புமிக்க குடும்பத் தலைவராக உருவாக்கப் பழக்குதல் என்பது சமூகத்தின் முதன்மையான கடமையாக உள்ளது. எப்படியோ படித்தால் மட்டும் போதும் என்கிற பரப்புரை ஏற்புடையதாக அமையாது. வேறு எந்த கல்வி சாராத வேலையையும் செய்ய பணிக்கவோ, தூண்டவோ, மேற்கொள்ளவோ அறவே கூடாது என்பது நாகரிக சமூகத்தின் நல்ல பயனுள்ள குரல் அன்று.

வகுப்பறை தூய்மை, குடிநீர் சேகரிப்பு, உணவு பராமரிப்பு, தன் சுத்தம் பேணுதலில் சக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் உதவுதல் பண்பு, தம் கழிவுகளைத் தாமே சுத்தப்படுத்திக் கொள்ள உதவும் இடத்தை நன்றாக வைத்துக் கொள்ளுதல், மரம் நடுதலும் பராமரித்தலும், குப்பை மற்றும் தண்ணீர் மேலாண்மை செய்தல் முதலான தனிநபர் சார்ந்த சேவைகள்தாம் வாழ்க்கைக் கல்வியின் கூறுகளாகும். தேசத்தந்தை உள்ளிட்ட உலகின் பல்வேறு மகத்தான மக்கள் போற்றும் மாபெரும் தலைவர்கள் பலரும் தம் வாழ்வியல் விழுமியங்களின் ஒரு பகுதியாக விளங்கும் இத்தகைய பணிகளை மேற்கொள்ள கூலிக்கு ஆள்கள் தேடவில்லை. கோடிக்கணக்கில் பணம் இருந்தும் வேலையாட்கள் ஏதும் நியமித்துக் கொள்ளவில்லை.

ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளும் இன்றுவரை பள்ளிகளில் படிக்கும் தம் பிள்ளைகள் இவற்றை இழிவான, கேவலமான செயல்களாகக் கருதாமல் பள்ளிக்கல்வியின் ஓர் அங்கமாகத் திகழும் சமூகப் பணியாக எண்ணி செயல்பட பெற்றோர்கள் அனுமதிக்கின்றனர். இக்குடிமைப் பண்புகளை மாணவரிடத்து வளர்க்கவும் இதனூடாகத் தலைமைப்பண்பும் கூட்டுறவு மனப்பான்மையும் பெருகிட பள்ளிகள் தோறும் மாதிரி நாடாளுமன்றம் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்தது.

பாடம் சாராத சமூகக்கல்வி சார்ந்த பொதுத்தூய்மை நடவடிக்கைகளில் ஆசிரியர்களுடன் இணைந்தும் இயைந்தும் இருபால் மாணாக்கர்கள் ஈடுபடும் போது வாழ்க்கை மீதான புரிதலும் ஆசிரியர் மீதான மதிப்பும் மரியாதையும் அன்பும் கூடும். சமூக ஊடகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகம் படம்பிடித்துக் கேள்விக் கேட்கவில்லை. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்குத் தண்டனைகள் அளிக்கவில்லை. போதாக்குறைக்கு இதுகுறித்து மாணவர்களிடம் செய்யப்படும் தவறான வழிகாட்டுதலால் தான்தோன்றித்தனமும் சமுதாயப் பணி செய்வதில் அலட்சியமும் ஆசிரியர்கள் மீதான மதிப்பு வெகுவாகக் குறைந்து மலிவதும் வரவர அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொதுப்புத்தியில் ஆணாதிக்க சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஆண் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் பெண் செய்து தீர வேண்டிய வேலைகள் பற்றிய ஏற்றத்தாழ்வுகள் களைய வேண்டிய நிலையில் குழந்தைகளை‌ வேலையே செய்ய அனுமதிக்கக் கூடாது என்பது ஒரு நல்ல தீர்வல்ல. இஃது இதுபோன்ற வேலை செய்பவர்களை மேலும் இழிவாக நோக்க வழிவகுக்கும். மனித சமூகத்தில் களையப்பட வேண்டிய சாதியம் இதன் காரணமாக மேலும் கெட்டிப்படும். இதற்கும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. பால் வேறுபாடுகள், சாதிப் பாகுபாடுகள் மற்றும் அவை பற்றிய இழிவுகள் இதனால் நீங்க ஒரு வாய்ப்புக் கிட்டும்.

பள்ளிகளில் மாணவர்கள் பாடத்திட்டம் சார்ந்தவற்றை கற்பதைக் கட்டாயக் கற்றல் என்றும் பாடம் சார்ந்த இணைச் செயல்கள் கற்பதை விருப்பக் கற்றல் என்றும் பாடம் சாராத வாழ்வியல் கல்வி சார்ந்து கற்பதை கற்காமல் கற்றல் என்றும் வகைப்படுத்த இயலும். இதுபோன்ற உடல் உழைப்பில் வெளியில் சிந்தும் வியர்வையை மட்டும் கணக்கில் கொள்ளக்கூடாது. மாணவர்கள் உள்ளுக்குள் நடைபெறும் நல்ல நடத்தை மாற்றங்களை உற்றுநோக்கி அறிவது மிகவும் அவசியம். கல்வியில் அதனூடாகப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான கற்பித்தல் உத்திகளும் அணுகுமுறைகளும் அவை மாணவர்கள் மனத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தும் ஆராய்வது இன்றியமையாதது.

இதற்கு சாதி, மத, இன அடையாள அரசியலைத் தூக்கிக்கொண்டு அலைவதும் அரசு அதற்காகப் பின்வாங்குவதும் ஆசிரியர்கள் தலையில் அதனைச் சுமக்க வலியுறுத்துவதும் ஒருபோதும் அறமாகக் கொள்ள முடியாது. இந்தக் கொடுமை வேறு எந்த துறையிலும் கிடையாது. எந்த ஆட்சியர்கள், எந்த வட்டாட்சியர்கள், எந்த உயர் அலுவலர்கள் தம் அலுவலகத்தை, வளாகத்தை, கழிப்பிடத்தைத் தாமே தூய்மைப்படுத்தும் சேவை செய்கின்றனர்? அதற்காகத்தானே பள்ளிகள் தோறும் தூய்மைப் பணியாளர்கள் தற்போது நியமித்துள்ளோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு வருவீர்களேயானால் அதுவும் தவறு. தற்காலிக தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் சொற்ப மதிப்பூதியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் நியமனம் செய்யப்பட்ட அப்பணியாளர்களுக்கு முறையாக மாதந்தோறும் அந்த மிகக் குறைந்த கூலியையும் பள்ளிகள் வாயிலாகக் கொடுப்பதில்லை. நியமிக்கப்பட்ட நாள் முதல் அவர்கள் தமக்குரிய மதிப்பூதியத்தைப் பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் நிலுவையாகப் பெற்று வருகின்றனர். இதன் காரணமாக, அவர்கள் தினமும் ஒழுங்காகப் பணி செய்ய வருவதில் சுணக்கம் காட்டுவதும் நூறு நாள் வேலை அல்லது விவசாயம் உள்ளிட்ட வேறுபல கூலி வேலைக்குச் செல்ல ஆர்வம் கொண்டுள்ளதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

அதுபோன்று, இவர்கள் பள்ளிக்கு வருகை புரியாத நாள்கள் முழுவதும் குப்பைகளும் கழிவுகளும் காத்திருக்குமா என்ன? அந்த நாள்களில் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் இவற்றைத் தம் சொந்த பொறுப்பில் தாமே சுத்தப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை இந்த சமூகம் உணர வேண்டும். இந்தக் கூத்து பல நாட்களுக்குத் தொடர்ந்தால் இவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவது நல்லது. ஏனெனில், நாளை இந்த சமூகம் திடீர் ஊடகவாதிகளாக மாறி நியாயம் பேசுவதற்கு வசதியாக இருக்கும். மாணவர்களுக்காக உயிரையும் பணயம் வைக்கும் சமூகமாக இன்றுவரை ஆசிரியர் பெருமக்கள் உள்ளனர். அதற்காக இந்த சமூகம் அவர்களை கடைநிலைக்கும் கீழான வேலைகளையும் பார்க்கச் சொல்வது எந்த வகையிலும் நியாயமில்லை. இதுபோன்ற நெருக்கடிகள் சூழ்ந்த பொழுதுகளில் பள்ளியில் படிக்கும் முதிர்ச்சி மிக்க மாணவ, மாணவிகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் அவர்களைத் திறம்பட கையாள முனைவதற்கும் முட்டுக்கட்டை போடுவதென்பது சரியாகாது. இஃதொன்றும் புதிய நடைமுறை இல்லை. தொன்றுதொட்டு இருந்து வந்தது தான். வெறும் வேலைக்கான படிப்பைச் சொல்லித் தரும் இடமாகப் பள்ளிகள் பார்க்கப்படுவது சமூகக் கேடாகும். வாழ்க்கைக்கான படிப்பினைகளைக் கற்றுத் தரும் களமாகவும் இவை இருத்தல் அவசியமாகும்.

இது நம் பள்ளி; நம் பெருமை என்று உதட்டளவில் உச்சரிப்பதில் ஒரு பயனும் இல்லை. அஃது ஒவ்வொரு தனி மனித உள்ளத்திலும் சிம்மாசனமிட்டு எப்போதும் ஒலிக்க வேண்டும். புதிய பாதையை நோக்கிப் பள்ளிப் பிள்ளைகளை மிக மிக பாதுகாப்பான முறையில் ஒரு பணிச்சுமையும் தராமல் அழைத்துப் போகச் சொன்னதைத் சிரமேற்கொண்டு பணிபுரியும் ஆசிரியர்கள் பலரும் மாணவர்களுடன் ஒரு பெரும் பாதாளத்திற்குள் வீழ்ந்து கிடந்து நாளும் உழன்று தவிப்பதை நன்கு அறிய முடிகிறது. முடிவாக, மனிதர்கள் செய்யும் எந்த வேலையும் இழிவானதல்ல என்று இன்னும் எத்தனைக் காலத்திற்கு வெறுமனே படித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?

*எழுத்தாளர் மணி கணேசன்*

1 comment:

  1. அருமையான பதிவு...வரவேற்கிறேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.