₹12000, ₹15000, ₹18000 ஊதியத்தில் தற்காலிக முறையில் ஆசிரியர்கள் நியமிக்க ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 10, 2023

₹12000, ₹15000, ₹18000 ஊதியத்தில் தற்காலிக முறையில் ஆசிரியர்கள் நியமிக்க ஆணை

தற்காலிக முறையில் ஆசிரியர்கள் நியமிக்க ஆணை!

தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டதோடு, பள்ளி மேலாண்மை குழு மூலம் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கவும்,* *இடைநிலை ஆசிரியர்களுக்கு ₹12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ₹15000, முதுகலை ஆசிரியர்களுக்கு ₹18000 ஊதியமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

Directed by Director of School Education to fill the vacant posts of Post Graduate Teacher/Graduate Teacher/Intermediate Teacher in Higher Secondary Schools - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

பார்வை 2 இல் கண்டுள்ள அரசாணையின் படி பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலிப்பணியிடங்கள். பணியில் உள்ள ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்து, அவற்றுள் மூத்த பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பொறுப்பு தலைமையாசிரியராகப் பணிபுரிவதால் பதிலியாக பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக அடிப்படையில் இடைநிலை/பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கட்கு மதிப்பூதியம் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.12,000/-ரூ.15,000/- மற்றும் ரூ.18,000/- வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவ்வரசாணையில் பத்தி 7(1)ல் * வரும் ஆண்டுகளில் தொடக்கக் கல்வி துறை மற்றும் பள்ளிக் கல்வி துறையில் ஏற்படும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம்/பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை, மாணவ மாணவிகளின் கல்வி நலன் கருதி,ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய பள்ளிக் கல்வி ஆணையருக்கு அதிகாரம் அளித்து ஆணை வழங்கப்படுகிறது. * என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்காணும் அரசாணையில் பத்தி 7(ii)ல் குறிப்பிட்டுள்ள அதிகாரத்திற்குட்பட்டும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்.WP.No.16704 of 2022ன் மீது மாண்பமை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால மற்றும் இறுதி தீர்ப்பாணைகளின் அடிப்படையில் பார்வை 1 இல் காணும் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) தவறாமல் பின்பற்றி 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு பொது மாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் உள்ள காலிப்பணியிடங்கள்/மகப்பேறு விடுப்பில் சென்றதாலும், பள்ளித் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருந்து அவற்றுள் பொறுப்புத் தலைமையாசிரியராக பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பதிலியாகவும், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக நியமனங்களை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நேர்வில் நடப்பு (2023-2024) கல்வியாண்டிற்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் போது, சென்ற ஆண்டு (2022-2023) மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளும்படியும், அவ்வாறு சென்ற ஆண்டைவிட கூடுதலாக நியமனம் செய்யப்பட தேவை இருப்பின்,எவ்வளவு தேவை என்பதை கடிதம் வாயிலாக தெரிவித்து, பின்னர் நியமனம் செய்து கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.