அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பணியாற்ற 3 பெண்களுக்கு சேர்த்து ரூ.5,000 ஊதியம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 3, 2023

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பணியாற்ற 3 பெண்களுக்கு சேர்த்து ரூ.5,000 ஊதியம்



அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தில் பணியாற்ற 3 பெண்களுக்கு சேர்த்து ரூ.5,000 ஊதியம் - 5,000 plus salary for 3 women to work in breakfast program in government schools

விருத்தாசலம்: தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் மூலம் செயல்படுத்தப்படவுள்ள காலை உணவுத் திட்டத்திற்கான பணியாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்று வரும் நிலையில், ரூ.5 ஆயிரம் 3 பேருக்கு எப்படி போதுமானதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்.15-ம்தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து செப்.16-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தனர். முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தத் திட்டத்தை மகளிர் சுய உதவிக் குழுவினரைக் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்த அரசு முனைந்துள்ளது. இதற்காக சில வரையறைகளை வகுத்துள்ளது. இதற்காக ஒரு பள்ளிக்கு 3 பெண் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அந்தப் பணியாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் 3 ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

அத்துடன் காலை உணவு செயல்படுத்தப்படும் பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோராக இருத்தல் வேண்டும். இந்த நிபந்தனைகளோடு ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் சேர்வதற்காக கட்சி பிரமுகர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் சிபாரிசு கடிதங்களோடு மகளிர் திட்ட அலுவலரை அணுகி வருகின்றனர். இந்தப் பணிக்காக ஒரு பள்ளியில் அமர்த்தப்படும் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் 3 பேருக்கும் சேர்த்து ரூ.5 ஆயிரம் ஊதியம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சொற்ப ஊதியமான ரூ.5 ஆயிரத்தை 3 பேரும் சம அளவில் பங்கிட்டுக் கொள்ளும்போது, இப்பணி சிறப்பாக நடைபெறுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இந்த 3 பேரும் சமைப்பது, காய்கறி நறுக்குவது, பாத்திரங்களை கழுவுவது உள்ளிட்ட பணிகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

காலை உணவுத் திட்டத்தில் சிறுதானிய உணவு வகைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சொற்ப ஊதியத்தில் பணிக்கு வரும் இந்த 3 மகளிருக்கும் இது கூடுதல் சுமையைத் தரும். ஏற்கெனவே மதிய உணவுத் திட்ட பணியாளர்கள் ஒரு பள்ளியில் இயங்கி வரும் நிலையில் காலை உணவுத் திட்ட பணியாளர்கள் வந்து செல்வதால், இடத்தை சுத்தம் செய்வது உள்ளிட்ட சிக்கல்கள் தற்போது எழுந்துள்ளன.

காலை உணவுத் திட்டத்துக்கான உபகரணங்கள் அனைத்தும் சத்துணவு மையத்திலேயே வைக்கும் வகையில் சத்துணவு மைய கட்டிடங்களின் ஸ்திரதன்மை குறித்து வட்டார வளர்ச்சிஅலுவலர்களிடம் ஆட்சியர்கள் அறிக்கை கேட்டுள்ளனர்.இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்போது, முறையான ஊதியம் இல்லாமல் செய்யும் போது மேலும் சில சிக்கல்கள் எழும் என்று சத்துணவு மேலாளர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக கடலூர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சண்முக வடிவிடம் கேட்டபோது, “அரசு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படித்தான் செயல்படுத்தவுள்ளோம். அதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் அவ்வப்போது களையப்படும்” என்றார்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட சத்துணவு பணியாளர்கள் சங்கச் செயலாளர் ரங்கசாமியிடம் கேட்டபோது, “ஏற்கெனவே மதிய உணவை சமைக்க பணியாளர்கள் உள்ள நிலையில், அவர்களிடமே இந்த காலை உணவுத் திட்டப் பணியை ஒப்படைக்கலாம். இந்த 5 ஆயிரம் ரூபாயை அந்தப் பணியாளர்களுக்கு பகிர்ந்தளித்தால் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும். அதை விடுத்து, புதிதாக சிலரை அங்கு ஈடுபடுத்துவதன் மூலம் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படவே அது வழிவகுக்கும்” என்றார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.