மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக் கொண்டாட்டம் கொண்டாடுதல் சார்பாக பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 15, 2023

மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக் கொண்டாட்டம் கொண்டாடுதல் சார்பாக பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்

Collaborative processes by the Commissioner of School Education and the Director of Elementary Education on behalf of celebration of matriculation celebrations to increase enrollment in under-enrolled government schools

மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக் கொண்டாட்டம் கொண்டாடுதல் சார்பாக CoSE & DEE ன் இணை செயல்முறைகள்!

2023-24 ஆம் கல்வி ஆண்டு - மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் கொண்டாடுதல் - சார்ந்து - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்
பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள், சென்னை-06.

ந.க.எண்.007579 / ஜெ2 / 2023, நாள்: 13.04.2023

பொருள் :

தொடக்கக் கல்வி - 2023-24ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க மாணவர் சேர்க்கைக் கொண்டாட்டம் கொண்டாடுவது - சார்பாக.

இன்றைய மாணவர்களே நாட்டின் எதிர்கால தூண்கள். மாணவர்களின் வகுப்பறை சூழல் சுமையானதாக இல்லாமல், இனிமை உடையதாகவும், ஒவ்வொரு நாளும் என்ன புதுமை வகுப்பறையில் நிகழ உள்ளதோ என்ற எதிர்பார்ப்பில் பள்ளியை நோக்கி மாணவர்கள் வருவதற்கும், எத்தகைய அசாதாரண சூழலையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்கும் இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும். பள்ளிப் பருவத்தில் அதற்குண்டான பயிற்சிகள் படிப்புடன் கூடிய செயல்பாடாக ஒவ்வொரு பள்ளியிலும் அமைவது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இத்தகைய மகிழ்ச்சியான வகுப்பறை நிகழ்வினை அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு சத்துள்ள காலை உணவு, மதிய உணவு, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, புவியியல் வரைபட புத்தகம், காலணிகள், கம்பளிச் சட்டை, மழைக்கால ஆடை மற்றும் பேருந்து பயண அட்டை போன்ற நலத்திட்டங்களை வழங்கி வருகின்றது.

வகுப்பறைக் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டு 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கற்றல் நிலைக்கேற்ப மாணவர்களை மையப்படுத்திய கற்றல் கற்பித்தல் அணுகுமுறையோடு எண்ணும் எழுத்தும் இயக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், கற்றல் இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க கலைத்திருவிழா, கலையரங்கம் மற்றும் பல்வேறு மன்ற செயல்பாடுகள் மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன. இத்தகைய கல்விசார் முன்னெடுப்புகள் அரசால் எடுக்கப்படினும், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இணைப்பில் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இப்பள்ளிகளில் 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

2023-2024ஆம் கல்வியாண்டில் இணைப்பில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும். இவ்விழிப்புணர்வு பேரணிக்கு "அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்" நிகழ்விற்கு பயன்படுத்தியவாறு வாகனம் ஒன்றை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்க வேண்டும். இவ்வாகனம் 50 பள்ளிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் மாவட்ட அளவில் தயார் செய்யப்பட வேண்டும். இவ்வாகனத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான அரசின் நலத்திட்டங்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள், கல்விசார் இணை செயல்பாடுகள் சார்பான விவரங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இவ்விழிப்புணர்வு பேரணியில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களும் பங்கு பெற வேண்டும். இரண்டு ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பயின்று பல்வேறு போட்டிகளில் வென்று வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற விவரங்களை பாடல்களாக வழங்கிட முயற்சி செய்தல் வேண்டும். மேலும், அரசுப் பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ் வழிப் பிரிவுகளுடன் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதனையும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள், எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை மற்றும் இல்லம் தேடிக் கல்வி சார்ந்து விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும். விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரமானது பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்கள் இவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அனைத்து ஆசிரியர்களையும் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

. குறிப்பாக மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர் எண்ணிக்கையை இந்தக் கல்வியாண்டில் உயர்த்த அறிவுறுத்த வேண்டும்.

. அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொது மக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் முன்னுரிமை

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை

பெண் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்க அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1000/-

மேற்படி முன்னுரிமை குறித்த விழிப்புணர்வினை பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாடநூல்கள், பாட குறிப்பேடுகள், நான்கு இணை சீருடைகள், புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள், காலணிகள், நிலவரைபடம், கணித உபகரணப் பெட்டி, பேருந்து பயண அட்டை, ஆதி திராவிட நல ஊக்கத் தொகை, மிகவும் பிற்படுத்தப்பட்ட/ சீர்மரபினர் வகுப்பு மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்கத் தொகை, தூய்மைப் பணியாளர் குழந்தைகளுக்கான ஊக்கத் தொகை, திறனறித் தேர்வு ஊக்கத் தொகை, விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான உதவித் தொகை, கோவிட்-19ல் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித் தொகை, மாற்றுத் திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, மருத்துவ முகாம்கள் மற்றும் ஊக்கத் தொகை, காலை சிற்றுண்டி, சத்தான சத்துணவுடன் வாரம் 5 முட்டை வழங்குதல், உண்டு உறைவிட பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் பற்றி பள்ளி வழியாக சுவரொட்டிகள் / துண்டு பிரசுரங்கள் மூலம் விரிவான விளம்பரம் செய்யப்படவேண்டும்.

மாணவர் சேர்க்கைக் கொண்டாட்டம் என்னும் இந்நிகழ்விற்கான செலவின தொகை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும்.

மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி 2023-24ஆம் கல்வியாண்டில் இணைப்பிலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி (இடைநிலைக் கல்வி) அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.