computer exam pass certificate - தேர்வு முடிவு வெளியாகி 5 மாதங்களாகியும் கணினி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் கிடைக்காமல் அவதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 3, 2023

computer exam pass certificate - தேர்வு முடிவு வெளியாகி 5 மாதங்களாகியும் கணினி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் கிடைக்காமல் அவதி

தேர்வு முடிவு வெளியாகி 5 மாதங்களாகியும் கணினி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் கிடைக்காமல் அவதி - Even after 5 months since the exam result was released, I have not received the computer exam pass certificate

அரசு கணினி தேர்வு முடிவு வெளியாகி 5 மாதங்கள் ஆகியும், தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படாததால் 9,964 தேர்வர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி, ஆகஸ்ட்) நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் பருவத்துக்கான தேர்வு 2022 அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வை 10.491 தேர்வர்கள் எழுதினர். தேர்வுமுடிவுகள் கடந்த நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டன. மொத்தம் 9,964 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 94.97 சதவீதம் ஆகும்.

வழக்கமாக தேர்வு முடிந்து 2 மாதங்களுக்குள் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும். ஆனால், கடந்த அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்ட அரசு கணினி தேர்வின் முடிவு வெளியாகி 5 மாதங்கள் ஆகியும், இன்னும் தேர்வர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், தேர்வர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக தேர்வெழுதியவர்கள் அந்நிறுவனத்தை அணுகினால், சான்றிதழ் விநியோகம் தொடர்பாக இதுவரை எவ்வித தகவலும் வரவில்லை என்று அவர்கள் விளக்கம் அளித்துவிடுகிறார்கள்.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் சுற்றுலா அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தமிழக அரசின் தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வுகளுக்கும் இத்தேர்வில் தேர்ச்சி அவசியம் ஆகும்.

அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு நடத்தப்படும் குருப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற போதிலும், பணிக்குத் தேர்வு செய்யப்படும்பட்சத்தில் அவர்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, தகுதிகாண் பருவம் முடித்தவர்களாக அவர்கள் கருதப்படுவர்.

அண்மையில் சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது. அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த முதுகலைப்பட்டதாரிகள் சுற்றுலாத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நோக்கில் கணினி தேர்வு தேர்ச்சி சான்றிதழுக்காக காத்திருந்தனர். ஆனால். சுற்றுலாத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரை (பிப்ரவரி 23) கணினி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அண்மையில் அறிவித்துள்ளது. இத்தேர்வை சுற்றுலா டிப்ளமா படிப்புடன், அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் எழுதலாம். எனவே, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இனியும் காலதாமதம் செய்யாமல் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக தேர்ச்சி சான்றிதழை வழங்க வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுற்றுலா அலுவலர் தேர்வு வாய்ப்பை இழந்த நிலையில், இந்த மாதம் வெளியாகவுள்ள உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்கவாவது கணினி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சுற்றுலா டிப்ளமா படித்த பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர். முந்தைய தேர்வுக்கான தேர்ச்சி சான்றிதழே இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டின் பிப்ரவரி பருவத்துக்கான அரசு கணினி சான்றிதழ் தேர்வு 2 வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.