அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான சதுரங்க விளையாட்டு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 8, 2023

அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான சதுரங்க விளையாட்டு

அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான சதுரங்க விளையாட்டு

நன்றி குங்குமம் தோழி

தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆக்டிவிட்டி வகுப்பு என்று ஒரு வகுப்பு தினமும் செயல்பட்டு வருகிறது.இதில் பாட்டு, நடனம், கேலிகிராஜபி, செஸ், ஸ்கேட்டிங் என குழந்தைகள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கற்றுக் கொள்ளலாம். அதேபோல் தற்போது அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார் சுபாஷினி பாலகணேசன். இவர் தன் கணவருடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டினை சொல்லிக் கொடுத்து வருகிறார். பல அரசுப் பள்ளி குழந்தைகளின் வாழ்க்கைப் பாதையை மாற்றியமைக்க முயன்று கொண்டிருக்கும் சுபாஷினி, சென்னையில் சிறு தொழில் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். மேலும் இவர்கள் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக சதுரங்க போர்டுகளை தருவதோடு அவர்கள் கற்றுக்கொள்வதற்கு பயிற்சியாளரையும் நியமித்து அசத்தி வருகிறார்கள். ‘‘நாங்க சென்னையை சேர்ந்த மிகச் சாதாரணமான நடுத்தர குடும்பம்தான். நானும் என் கணவரும் சென்னையில் சிறிய அளவிலான இன்ஜக் ஷன் மோல்டிங் கம்பெனி வைத்து நடத்தி வருகிறோம். எங்களுக்கு பெரிய அளவில் கல்வி பின்புலமோ பொருளாதார பின்புலமோ கிடையாது. வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை என்று வாழ்ந்து வரும் மிக மிகச் சாதாரணமான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

அரசுப் பள்ளிகளுக்கு சதுரங்க போர்டு வழங்கும் எண்ணம் எப்படி வந்தது?

இந்த எண்ணத்தை எங்களுக்கு முதன்முதலில் மனதுக்குள் விதைத்தவர் பாரதி என்கிற மிட்டூர் பஞ்சாயத்து பள்ளி ஆசிரியர் ஒருவர்தான். அவர் முதன்முதலில் தனது பள்ளி குழந்தைகளுக்கு அவர்கள் விளையாட விரும்பும் சதுரங்க விளையாட்டு பலகையை யாராவது வழங்க முடியுமா? என ஃபேஸ்புக்கில் உதவி கேட்டிருந்தார். அப்போது தான் எனக்கும் எனது கணவருக்கும் இதை ஏன் நாம் செய்யக்கூடாது என்கிற எண்ணம் எழுந்தது. அப்போது அவர் கேட்டது வெறும் நாலு போர்டுதான். எங்களோட சில நண்பர்களும் கை கோர்த்த நிலையில் பத்து சதுரங்க போர்டுகளை வழங்க திட்டமிட்டிருந்தோம். எதிர்பாராத விதமாக எங்களுக்கு முப்பது போர்டுகள் வரை தர முடிந்தது. அதுதான் முதல் விதை…

அதைத் தொடர காரணம்….

அந்த முப்பது போர்டுகளை குழந்தைகளிடம் தர நாங்கள் நேரில் மிட்டூர் பள்ளிக்கு சென்றிருந்தோம். ஐந்து முதல் பத்து வயதுள்ள குழந்தைகள் அங்கே இருந்தனர். அப்போது அந்த குழந்தைகள் முகத்தில் தோன்றிய ஆர்வமும் உற்சாகமும், அந்த ஆசிரியரின் பேச்சும் இதை தொடர்ந்து செய்தால் என்ன என்கிற எண்ணத்தை எங்களுக்குள் விதைத்தது. அதுவும் கொரோனா காலத்தில் மொபைலோட வாழப் பழகிய குழந்தைகளை அதிலிருந்து மீட்டெடுக்கும் மிகச்சிறந்த வழியாக இது அமையும் என்று தோன்றியது. துரோணா அகாடமி?

அந்த பள்ளிக்கு சென்று வந்த பிறகு எனக்கும் என் கணவருக்கும் சதுரங்க விளையாட்டு குறித்த சிந்தனையாகவே இருந்தது. இது குறித்து எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்களிடம் நிறைய பேசினோம். அவர்களின் கருத்துக்களை கேட்டோம். அப்போது பலரும் இது மிகச்சிறந்த ஐடியா. இதை பலரோடு கைகோர்த்து செய்யலாம் என நம்பிக்கை அளித்தனர். அப்பொழுது உருவானதுதான் இந்த துரோணா அகாடமி பார் ஸ்கூல்ஸ் அண்ட் ஸ்கில்ஸ். இந்த அமைப்பு மூலமாக பல அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு செஸ் போர்டுகளை கொடுக்க ஆரம்பித்தோம்.

பயிற்சியாளர்கள் நியமனம்?

சதுரங்க போர்டுகளை கொடுப்பதோடு எங்கள் பணி முடிந்து விடாது என தோன்றியது. அதற்கான பயிற்சியாளர்களை நியமித்தால்தான் நாங்க கொடுத்த சதுரங்க போர்டின் முழு பலனை அடைய முடியும். முதலில் அந்தந்த ஊர்களில் உள்ள லோக்கல் செஸ் அசோசியேஷன் ஆட்களை தொடர்பு கொண்டோம். ஆசிரியர்கள் சிலரும் செஸ் அசோசியேஷனிலிருந்து சிலரும் வந்து குழந்தைகளுக்கு பயிற்சி தர ஆரம்பித்தார்கள். அதற்கான செலவுகளையும் நாங்களே ஏற்றுக் கொண்டோம்.

அத்தோடு இல்லாமல் செஸ் போர்டு வாங்கிய பிள்ளைகளின் தொலைபேசி எண்கள் பெற்று தொடர்ந்து அவர்களது முன்னேற்றங்களை கேட்டறிந்தோம். அதிலிருந்து வந்த தகவல்கள் எங்களை மேலும் பலவகையில் உற்சாகப்படுத்தியது. இதை அறிந்த அருகிலிருந்த பள்ளிகள் தங்களின் பள்ளிக் குழந்தைகளுக்கும் இந்த ஏற்பாடுகளை செய்து தர முடியுமா என்று கேட்டனர். அப்படித்தான் எங்களின் பயணம் மேலும் தொடர ஆரம்பித்தது.

அதிகாரிகளின் ஒத்துழைப்பு?

எங்களின் அமைப்பு சார்பாக நாங்க தொடர்பு கொண்ட அத்தனை மனிதர்களும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். காரணம், நாங்கள் அரசுப் பள்ளிகளுக்கு உதவ வேண்டும் என்றால், அதற்காக கல்வித்துறை சார்ந்த அதிகாரிகளிடம் இருந்து அனுமதிகளை பெற வேண்டும். நாங்கள் சந்தித்த கல்வி துறை அதிகாரிகள் முதல் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் என அனைவரும் எங்களுக்கு பெரிதும் உதவினார்கள். எங்களால் நிச்சயமாக இதனை தனியே செய்திருக்க முடியாது. ஊர் கூடி தேர் இழுத்திருக்கிறோம் என்று பெருமையாக சொல்கிறோம். தற்போதைய முன்னேற்றம்?

குழந்தைகள் மாவட்ட அளவில் விளையாடி பல மெடல்களை வென்ற பிறகே இதற்கான முக்கியத்துவங்கள் இன்னும் அதிகமாகிறது என எங்களுக்கு புரிய துவங்கியது. தற்போது எங்கள் குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கான ஸ்பான்சர்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்…

செஸ் போர்டு தயாரிக்கும் எண்ணம்?

முதலில் நாங்கள் செஸ்போர்டுகளை வெளியே வாங்கிக் கொடுத்து கொண்டிருந்தோம். நாங்கள் சிறிய அளவிலான ப்ளாஸ்டிக் மோல்டிங் தொழிலில் ஈடுபட்டு இருப்பதால் நாங்களே செஸ்போர்டுகள் மற்றும் செஸ் காயின்களை செய்தால் என்ன என்கிற எண்ணம் தோன்றியது. நாங்களே தயாரிப்பதன் மூலம் செஸ் போர்டின் அடக்க விலை குறைந்து எங்களால் அதிக போர்டுகளை வழங்க வசதியாக இருக்கிறது. இதுவரையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு 2200க்கும் அதிகமான சதுரங்க பலகைகளை வழங்கி உள்ளோம்.

இதனை மேலும் பலமடங்கு விரிவுபடுத்தும் எண்ணம் எங்களுக்கு இருக்கிறது என்று கூறும் சுபாஷினி அரசுப் பள்ளி மாணவ, மாணவர்களை சதுரங்க விளையாட்டுகளோடு ஏனைய பல விளையாட்டுகளிலும் ஈடுபடுத்த வேண்டும் என்கிற மிகப்பெரிய எதிர்கால திட்டமொன்றை வைத்திருக்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.