அரசிற்கும் அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்குமான நல்லுறவினை சிதைக்கும் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் பேச்சிற்குக் கண்டனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 2, 2023

அரசிற்கும் அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்குமான நல்லுறவினை சிதைக்கும் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் பேச்சிற்குக் கண்டனம்

PTR-ன் பேச்சு தமிழ்நாடு அரசு சமூக நீதிப் பாதையில் இருந்து Corporate பாதையில் பயணிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது - தலைமைச் செயலகச் சங்கம் அறிக்கை. நாள்:28.03.23!

Condemnation of Hon'ble Minister of Finance and Human Resource Management for his speech which destroys the good relationship between the government and the government employees-teachers.

அரசிற்கும் அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்குமான நல்லுறவினை சிதைக்கும் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் பேச்சிற்குக் கண்டனம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இளைஞர்களின் அரசு வேலைவாய்பினை காத்து, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து, சமூக நீதியினைக் காத்திட வேண்டும் நேற்றைய தினம் (27.03.2023) சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்ட தொகுதி IV தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அளித்த பதிலுரையில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள்,

அந்த அரசாணை வரும் போது பலர் எதிர்த்தார்கள். Temporary employees அரசில் வேலை செய்கின்ற Temporary employeesக்கெல்லாம் ஒரு minimum ஆவது கொடுக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னோம். சில பேர் தற்காலிமாக இருந்து கொண்டு, ரூ,5,000, ரூ.8,000, ரூ,10,000 எல்லாம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், முழு நேரப் பணியாளர்கள் பல இலட்சம் ரூபாய் வாங்குகிறார்கள். இது நியாயமல்ல. அதனால் அடிப்படை outsourcingக்கு ஒரு standard போட்டு, இவர்களையெல்லாம் EPFல் ESIல் சேர்க்க வேண்டுமென்பதற்காகத்தான், நாங்கள் இந்த அரசாணையைக் கொண்டு வந்தோம். அதையெல்லாம் எதிர்த்து, இல்லை இல்லை, சமூக நீதியை எதிர்த்து இப்படி செய்கிறீர்கள், அப்படி செய்கிறீர்கள் என்றால், சமூக நீதி அடிப்படையிலும் மனித வளத் துறையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் எந்த அரசுக்கும் பின் தங்கிய அரசில்லை இந்த அரசு, மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் நான். எனவே, எல்லா வகையிலும் சீர்திருத்துவதற்கு முதல் ஆளாக நான் நிற்கிறேன். எல்லோரும் ஒத்துழைத்து, இந்த மாநிலத்தின் நலனுக்காக அரசாங்கத்தின் எதிர்காலத்திற்காக செய்ய வேண்டிய முயற்சிகளை அனைவரும் ஆதரிக்க வேண்டுமென்று கூறுகிறேன்." மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் பதிலுரையில் குறிப்பிட்டுள்ள அரசாணை என்பது அரசாணை எண் 115, மனிதவள மேலாண்மைத் துறை, நாள் 18-10-2022. இந்த அரசாணையானது அரசுப் பணிக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி தொடர்பாக

ஒரு வல்லுநர் குழு அமைத்து அதற்கான ஆய்வு வரம்புகளை குறிப்பிட்டது. அவையாவன பன்முக வேலைத் திறனோடு பணியாளர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு ஆகியவை அமைய வேண்டும்.

அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள் / பதவிகள் / பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது பரந்துபட்ட முறையில் பிரிவு டி மற்றும் சி பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற மூன்றாவது முகமை அதாவது வெளிமுகமை ஆட்சேர்ப்பு நிறுவனங்களை பட்டியவிட்டு, பல்வேறு நிலை மனிதவன அரசுப் பணியிடங்களை அவற்றைக் கொண்டு நிரப்புவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது

அரசின் உயர்நிலைப் பணியிடங்களை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு அப்பணியிடங்களின் வேலைத்திறன் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை ஆராய்தல் பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமித்து, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களின் பணிச் செயல்பாடுகளை ஆய்வுசெய்து, அதன்பிறகு அவர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வது இந்த ஆய்வு வரம்புகள் என்பது தமிழக அரசால் பின்பற்றப்பட்டு வரும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு எதிரானதாகவும் இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பினைத் தகர்க்கும் விதமாகவும் இருந்ததால், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு 7-11-2022ல் இந்த அரசாணையினை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க நிர்வாகிகளை நேரில் அழைத்துப் பேசி, அரசாணை எண் 115ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவிற்கான ஆய்வு வரம்புகளை இரத்து செய்து ஆணையிட்டார்கள்.

இவ்வாறு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு இரத்து செய்யப்பட்ட அரசாணையினை, மீண்டும் குறிப்பிட்டு, அது சரியான ஆய்வு வரம்புகளோடு வெளியிடப்பட்டதுதான் என்கிற தொணியில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்திலேயே பேசியிருப்பது என்பது உள்ளபடியே மனித வள மேலாண்மைத் துறை என்பது முழுக்க முழுக்க corporate பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதனைத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் யார் இருந்தாலும், தமிழக அரசின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டினை இந்திய அரசியல் சாசனத்தில் பாதுகாப்பு பெற்று நடைமுறைக்குக் கொண்டு வந்து, சமூக நீதியானது பாதுகாக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், சட்டமன்றத்தில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் கூற்று என்பது முற்றிலும் எதிரானதாக அமைந்துள்ளது.

மேலும், மாண்புமிகு அமைச்சரின் பேச்சானது, இந்திய நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஆட்சியினை நடத்திக் கொண்டிருக்கும் திராவிட மாடலுக்கும் எதிரானதாக அமைந்துள்ளது. வெளிமுகமை மூலமாக பணியாளர்களை பணியமர்த்தும்போது அந்த வெளிமுகமைகள் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை எந்த வகையில் நடைமுறைப்படுத்தும் ? அதோடு மட்டுமல்லாமல், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள், முழு நேரப் பணியாளர்கள் பல இலட்சம் ரூபாய் வாங்குகிறார்கள் எனக் குறிப்பிட்டு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மீதான தனது வெறுப்பினை வெளிக்காட்டியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்று இதுநாள் வரை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அரசிற்கும் அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்குமான நல்லுறவினை சிதைக்கும் வகையில் பேசி வந்த மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்திலேயே இச்செயலை அரங்கேற்றியுள்ளார்.

முழு நேரப் பணியாளர்களாக, அதாவது தமிழக அரசுப் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், யாரும் எந்த தனி நபரின் சிபாரிசின் மூலமாகவோ வேறு ஏதாவது குறுக்கு வழியிலோ அரசுப் பணிக்கு வந்தவர்கள் அல்ல; சில ஆயிரம் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளில் பல இலட்சம் பேர் கலந்து கொண்டு அதில் தேர்வாகி அரசுப் பணிக்கு வந்தவர்கள். மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் கூறுவதைப் போல பல இலட்சம் ரூபாய் பணியில் சேரும் போது யாரும் வாங்குவதில்லை. 25 ஆண்டுகள் கடந்த பின்னர்தான், அதிலும் பதவி உயர்வு கிடைக்கும்போதுதான், 12 இலட்சம் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களில் சில ஆயிரம் பணியாளர்கள்தான் இலட்சம் என்ற மாதாந்திர சம்பளத்தினை அடைந்துள்ளனர். மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பல இலட்சம் பேர் கலந்து கொண்டு போட்டித் தேர்வுகளில் தேர்வான முழு நேரப் பணியாளர்களை தற்காலிகப் பணியாளர்களோடு ஒப்பிடுவது எந்த விதத்தில் நியாயம் ? திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், அரசுப் பணியில் 3.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதிக்கு மாறாக, அவற்றை தனியார் முகமை மூலம் நிரப்புவதுதான் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் நோக்கமா ? அதற்காகத்தான் மீண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் இரத்து செய்யப்பட்ட அரசாணை எண் 115ன் ஆய்வு வரம்புகளை மீண்டும் கொண்டுவர மாண்புமிகு அமைச்சர் எத்தனிக்கிறாரோ ?

தற்போது பணியிலுள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களை முழு நேரப் பணியாளர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம், இனிமேல் வருங்காலங்களில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களின் திட்டத்தின்படி, எந்தவொரு பணியிடத்தினையும் நிரந்தரப் பணியிடமாக கொள்ளாமல், அத்தக்கூலியாக-பணிப் பாதுகாப்பு என்பதே இல்லாமல், குறைந்த ஊதியத்தில் கார்ப்பரேட் மாடலில் செயல்படுத்த முழு முயற்சி செய்து கொண்டுள்ளதை வெளிப்படையாகவே சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதன் வெளிப்பாடுதான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுக்கான ஆண்டு திட்டத்தில் (Annual Planer) 2000க்கும் குறைவான பணியிடங்களை நிரப்புவதற்கான திட்டமிடல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதான் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் திட்டமிடுகின்ற திராவிட மாடலுக்குள்ளான கார்ப்பரேட் மாடலோ? ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று தவணை அகவிலைப்படியானது ஆறு மாத காலம் காலம் கடந்து, நிலுவைத் தொகையினை மறுத்து வழங்கிய பிறகும், மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மீது வன்மமான முறையில், ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான பணியாளர்கள் பெறும் இலட்ச ரூபாய் மாத சம்பளத்தை பெரிதாக்கி, ஏதோ அனைத்துப் பணியாளர்களும் சுகபோகிகளாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் போல் உருவகப்படுத்துகிறார்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, இளைஞர்களின் வேலைவாய்ப்பினை காத்து, 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பணியாளர்களை நியமனம் செய்து, சமூக நீதியினைக் காத்திடவும், அரசுக்கும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்குமான நல்லுறவினை காத்திடவும் வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.