கல்வித்துறை பெயரில் YouTube Channels - அடுத்த சர்ச்சையில் EMIS TEAM - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 28, 2023

கல்வித்துறை பெயரில் YouTube Channels - அடுத்த சர்ச்சையில் EMIS TEAM



கல்வித்துறை பெயரில் YouTube Channels - அடுத்த சர்ச்சையில் EMIS TEAM YouTube Channels in the Name of Education - EMIS TEAM in Next Controversy

கல்வித்துறையில் 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை தளத்தில் பதிவான மாணவர் தகவல்களை சிலர் விற்பனை செய்வதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, இத்துறை செயலிகளின் பதிவேற்ற செயல்முறைகளை யு டியூப்பில் வெளியிட்டு லட்சக்கணக்கான ஆசிரியர்களை கட்டாயம் பார்க்க வைப்பதன் மூலம் சிலர் வருவாய் ஈட்டி வருவதாக அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் சுயவிபரங்களை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்வதான புகார் தொடர்பாக தற்போது போலீஸ் விசாரணை துவங்கியுள்ளது. இத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள 'எமிஸ்' அலுவலகச் செயல்பாடுகள் குறித்து பல எதிர்மறை தகவல்கள் வெளியானாலும் அதுதொடர்பான எவ்வித துறைரீதியான விசாரணையும் இதுவரை நடக்கவில்லை.

இத்தளத்தில் உள்ள தகவல்கள் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த சந்தேகத்தை உறுதி செய்வது போல் மாணவர்கள் பற்றிய தகவல் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் சென்னை எமிஸ் அலுவலகத்தில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் கல்வித்துறை பெயரில் சில யு டியூப் சேனல்களை நடத்தி, மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டிய செயல்முறைகள், எமிஸில் மேற்கொள்ள வேண்டிய பதிவேற்றங்களை வீடியோவாக வெளியிட்டு லட்சக்கணக்கான 'பார்வை', 'லைக்'குகளை பெற்று வருகின்றனர்.

இதன்மூலம் ரூ.பல லட்சம் வருவாய் ஈட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

எமிஸில் பணியாற்ற ஆசிரியர் சிலருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது. எமிஸில் அவ்வப்போது ஏற்படும் மாற்றம், ஆசிரியர், மாணவர் வருகை பதிவேடு, எமிஸ் செயலியில் புதிய பதிவேற்றம் செய்வது பற்றிய விவரங்கள் முறையாக ஆசிரியர்களுக்கு தெரிவிப்பதற்குள் கல்வித்துறை பெயரில் செயல்படும் சில 'யு டியூப்' சேனல்களில் வீடியோக்களாக வெளி வந்துவிடுகின்றன.

லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு அதன் 'லிங்'கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 'எமிஸ் அப்டேட்' என்பதால் வேறு வழியின்றி அத்தனை ஆசிரியர்களும் கட்டாயம் பார்க்க வேண்டி சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் மூலம் அரசு பணியில் உள்ள சிலர் வருவாய் ஈட்டி வருகின்றனர் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.