உலகளவில் ஐடி நிறுவனங்களின் ஆள் குறைப்பு நடவடிக்கையால் புதிதாக படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்: கல்வியாளர்கள் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 26, 2023

உலகளவில் ஐடி நிறுவனங்களின் ஆள் குறைப்பு நடவடிக்கையால் புதிதாக படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்: கல்வியாளர்கள் தகவல்

உலகளவில் ஐடி நிறுவனங்களின் ஆள் குறைப்பு நடவடிக்கையால் புதிதாக படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும்: கல்வியாளர்கள் தகவல் - Downsizing by IT firms globally will boost employment for fresh graduates: Academics inform

உலக அளவில் மிகப்பெரிய நிறுவனங்களாக கருத்தப்படும் கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், விப்ரோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த வருடம் துவங்கியதில் இருந்து இந்நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதால் அதில் பணிபுரியும் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஜனவரி 5ம் தேதி அமேசான் நிறுவனத்தில் இருந்து 18 ஆயிரம் பேரும், ஜனவரி 18ம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து 10 ஆயிரம் பேரும், ஜனவரி 20ம் தேதி கூகுள் நிறுவனத்தில் இருந்து 12 ஆயிரம் பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, அசென்ஞர் நிறுவனம் 19 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியை துவங்கியுள்ளது. இது போன்று மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் நிதி நிலைமைகளை சீர் செய்து கொள்ளவும், தற்போது நிலவும் உலக பொருளாதார மந்த நிலையில் இருந்து தற்காத்து கொள்ளவும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிறுவனங்களை பின்பற்றி பல்வேறு நிறுவனங்களும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட துவங்கியுள்ளனர். இதனால், ஐடி மற்றும் ஐடி அல்லாத நிறுவன ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 2023ம் ஆண்டு துவக்கம் முதலே ஆள்குறைப்பு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் கூடுதல் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி முதல் தற்போது வரை உலக அளவில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் தங்களது பணியை இழந்துள்ளனர். இந்தியாவில் வளர்ந்து வரும் பல்வேறு நிறுவனங்களும் இதே போல் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை சிறுக சிறுக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே துவங்கி தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆள் குறைப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தற்போது படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்பை தேடும் மாணவர்களும், இளைஞர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், அதே சமயம் ஆள்குறைப்பு நடவடிக்கையால் புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோவையில் கடந்த 10 வருடங்களாக ஐடி நிறுவனங்கள் மெல்ல மெல்ல வளர்ந்து வருகின்றன. அதற்கு ஏற்றார் போல் கோவை மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களும் வளர்ந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் அரசு சார்பில் சிங்காநல்லூரில் டைடல் பார்க் உள்ளது. இதுதவிர சரவணம்பட்டி, அவினாசி சாலைகளில் தனியார் ஐடி நிறுவனங்களின் டெக் பார்க்குகள் உள்ளன.

இவைகளில் 100க்கும் மேற்பட்ட சிறிய ஐடி நிறுவனங்களும், 20க்கும் மேற்பட்ட பெரிய ஐடி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் நோக்குடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த இலக்கை அடைவதில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உள்ள ஸ்டார்ட்அப்கள் மற்றும் தொழில்முனைவோர் முயற்சிகள் மற்றும் அவர்களின் திறமையான பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் பல வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு, ரோபட்டிக்ஸ், டிரோன் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஐடி துறையில் 2030-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 25 லட்சம் திறன் மிக்க பணியாளர்களை கொண்டிருக்கவேண்டும் என அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இதற்காக தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களுக்கு அதிகவேக இணைய சேவை கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 7 மாதங்களுக்குள் நிறைவடையுள்ளன. தற்போது தமிழக அரசின் 235 திட்டங்களை இ-சேவை வழியாக பெறலாம். இன்னும் 40 திட்டங்கள் இ-சேவை மையம் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இ-அலுவலகம் மூலம் அரசு அலுவலகங்களுக்கிடையே கோப்புகள் பரிமாற்றம் எளிதாக செய்யலாம். தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியால் இங்கு ஐடி நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கும். உலக அளவில் உள்ள ஆட்குறைவு தாக்கம் தமிழகத்தில் குறைவாக தான் இருக்கும் என ஐடி துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கல்வியாளரும், எஸ்.என்.எஸ். கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப இயக்குனருமான நளின் விமல்குமார் கூறுகையில்,``பணிநீக்க நடவடிக்கைகள் மிகவும் வருத்தமாக இருக்கிறது. புதிய ஆள்சேர்ப்புகளில் நிச்சயமாக அதிகரிப்பு இருக்கும், ஏனெனில் நிறுவனங்கள் செலவை மிச்சப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சேவையை தொடரவும் புதியவர்களை நிறுவனங்கள் கண்டிப்பாக வேலைக்கு அமர்த்தும்.

ஐடி நிறுவனங்களின் அதிவேக எழுச்சியின் பொருளாதாரம் மற்றும் இயக்கவியலை விமர்சன ரீதியாக புரிந்துகொள்வதில் மாணவர்கள் இந்த நாட்களில் மிகவும் புத்திசாலிகள். கல்வி நிறுவனங்கள் இது போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள மாணவர்களின் மனதை உருவாக்குவதற்கும், எல்லாவற்றின் மத்தியிலும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் கட்டமைப்பை கொண்டுள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.