ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 25, 2023

ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்



ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்கள் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் - Adi Dravidian Tribe Students Can Apply For Education Scholarship: Collector Info

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 2022-2023 ம் கல்வியாண்டில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணவ மாணவிகளின் வங்கி கணக்கு எண் ஆதாருடன் இணைக்கப்படுவது கட்டாயமாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற்ற பள்ளி மாணவ மாணவிகளின் வங்கி கணக்குகளில் 18 ஆயிரத்து 278 மாணவ மாணவிகளின் வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ளன. அந்த மாணாக்கர்கள் தங்களுடைய வங்கி கணக்கு எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். மேலும், வங்கி கணக்கு பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கி கணக்கு பயன்பாட்டில் இல்லாத மாணாக்கர்களுக்கு அஞ்சலகத்தில் வங்கி கணக்கு துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாத மற்றும் வங்கி கணக்கு எண் நடப்பில் இல்லாத மாணவ மாணவிகளின் நலன் கருதி கடந்த 15 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் மூலமாக எவ்வித செலவினமும் இல்லாமல் பூஜ்ஜியம் இருப்பு வங்கி கணக்கு துவக்கும் பணி அஞ்சல்துறை மூலம் நடைபெற்று வருகிறது. பள்ளி வாரியாக வங்கி கணக்கு துவங்க வேண்டிய விபரங்கள் முதன்மை கல்வி அலுவலர், மண்டல அஞ்சலக முதுநிலை மேலாளர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அஞ்சல் ஊழியர்கள் மூலமாக பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணக்கர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அஞ்சலக ஊழியர்கள் பள்ளிகளில் முகாம் நடத்துவதற்கு தலைமை ஆசிரியர்கள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம் மூலமாக அல்லது அருகாமையில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்கோ சென்று அஞ்சலக வங்கி கணக்கு துவக்கும் பணியை தலைமை ஆசிரியர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.