6 முதல் 12 வரை அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 13, 2023

6 முதல் 12 வரை அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டம்

6 முதல் 12 வரை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்

புதுச்சேரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்-சில் முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். காலை 10.45 மணிக்கு பட்ஜெட் வாசிக்க தொடங்கி 11.10க்கு நிறைவு செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்: ''புதுச்சேரியி்ல் 2023-24ம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு ரூ. 11,600 கோடி என நிர்ணியிக்கப்பட்டுள்ளது. சொந்த வருவாய் வரவினங்கள் ரூ.6154 கோடியாகவும், மத்திய அரசு நிதியுதவி ரூ. 3177 கோடியாகவும், மத்திய அரசு திட்டங்களின் கீழ் தரப்படும் நிதி ரூ. 620 கோடியாகவும் உள்ளது.

நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய மத்திய அரசு அனுமதியுடன் வெளிச் சந்தை கடன் ரூ.1707 கோடியாகும். நடப்பாண்டில் மகளிருக்கு சிறப்பு நிதியத்துக்கு ரூ. 1332 கோடியும், பசுமை சிறப்பு நிதியத்துக்கு ரூ. 555 கோடியும், இளையோருக்கான சிறப்பு நிதியத்துக்கு ரூ 504 கோடியும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிதியங்களுக்கு ரூ. 2391 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டியைச் செலுத்துதல் ஆகிய செலவினங்களுக்காகச் செலவிடப்படுகிறது.

பட்ஜெட்டில் சம்பளத்துக்கு 21.92 சதவீதமும் (ரூ.2542 கோடி), ஓய்வூதியங்களுக்கு ரூ. 12.53 சதவீதமும் (ரூ.1455 கோடி), கடன், வட்டிக்கு 15.95 சதவீதமும் (ரூ. 1850 கோடி), மின்சாரம் வாங்க 14.57 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியம் மற்றும் நலத்திட்டங்களுக்கு 16 சதவீதமும் (ரூ1856 கோடி), தன்னாட்சி உயர் கல்வி நிறுவனங்களுக்கு 3 சதவீதமும் (ரூ. 350 கோடியும்), கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியக் கொடையாக 9.39 சதவீதமும் (ரூ. 1089 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுதானிய பயறு வகைகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் தரப்படும். அத்துடன் இடுபொருள் மானியமாக ரூ. 7 ஆயிரம் தரப்படும். இயற்கை முறையில் நெல் ரகங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் உற்பத்தி மானியம் தர உத்தேசித்துள்ளோம். 600 ஹெக்டேர் பரப்பு விளை நிலங்களை இயற்கை வேளாண்மை சாகுபடியில் கொண்டுவர உள்ளோம். நடப்பாண்டு வேளாண்துறைக்கு ரூ. 159.36 கோடி ஒதுக்கியுள்ளோம்.

பால் உற்பத்தியைப் பெருக்க உயர் ரக கலப்பின கறவை பசு 50 விழுக்காடு மானியத்தில் தரப்படும். ஒரு கறவை பசு வைத்திருப்போருக்கு 50 விழுக்காடு மானியத்தில் இரண்டு கலப்பின கறவைப்பசுக்கள் தரப்படும். 3 கறவைப்பசு வைத்திருந்தால் மேலும் 2 பசுக்கள் 40 சத மானியத்தில் தரப்படும். நவீன பால் கறவை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக தரப்படும்.

பாரதியார் நினைவு அருங்காட்சியகம், பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், மகாகவி பாரதியார் நினைவு மண்டபம், கீழூர் நினைவுச்சின்னம், மக்கள் தலைவர் சுப்பையா நினைவகம் ஆகியவற்றில் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் துவங்கப்படும். புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தினை மேம்படுத்தும் பொருட்டு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி தரப்படும். கல்வித் தரத்தை மேம்படுத்த ஆறு முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும். விரைவில் இலவச மடிக்கணினி தரப்படும். தெரு விளக்குகள் அனைத்தும் எல்இடி விளக்குகளாக ரூ. 4.5 கோடியில் மாற்றப்படும். தீயணைப்புத்துறைக்கு 54 மீட்டர் உயரம் செல்லும் அதிநவீன ஸ்கை லிப்ட் வாங்கப்படும்.

புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோயில் திருவுருவச்சிலைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், இதர அசையும் சொத்துகள் உட்பட அனைத்து ஆவணங்களும் டிஜிட்டலாக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றப்படும். அசையா சொத்துகள் விவரம் சேகரிக்கப்பட்டு கோயில் நிலம், வீடு, வணிக வளாகம் ஆகியவற்றில் பெறப்படும் வாடகை உயர்த்தப்படும். நடப்பாண்டு திருக் காஞ்சியில் ரூ.1.66 கோடியில் மகா புஷ்கரணி விழா நடைபெறும்.'' இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.