கழிவறையை கழுவிய மாணவர்கள்! இப்படிதான் வேலை வாங்குவீங்களா? சிக்கிய தலைமையாசிரியர்! பாய்ந்து வந்த கேள்வி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 2, 2023

கழிவறையை கழுவிய மாணவர்கள்! இப்படிதான் வேலை வாங்குவீங்களா? சிக்கிய தலைமையாசிரியர்! பாய்ந்து வந்த கேள்வி

கழிவறையை கழுவிய மாணவர்கள்! இப்படிதான் வேலை வாங்குவீங்களா? சிக்கிய தலைமையாசிரியர்! பாய்ந்து வந்த கேள்வி Students washed the toilet! Is this how you get a job? Trapped Principal! The question that came up


பள்ளியின் தூய்மை பணிக்காக சிறு தொகை ஒதுக்கப்படும். அப்படி இருக்கையில் அந்த தொகை எங்கே என்று சிபிஐ கட்சியினர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அரசுப்பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவலாக பரவிய நிலையில், பள்ளி தலைமை ஆசிரியருக்கு எதிராக பெற்றோர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்திருக்கிறது. இப்பள்ளி தொடங்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகிறது. தற்போது இதில் சுமார் 180 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதை போன்ற வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து சிபிஐ ஒன்றிய செயலாளர் பிச்சுமணி கூறுகையில், "இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருகிறது. மாநில அரசு, அரசு பள்ளிகளை பலப்படுத்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் இந்த திட்டங்கள் இப்பள்ளியில் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. அதேபோல போதுமான ஆசிரியர்கள் இல்லாது, பள்ளிக்கான உபகரணங்கள் பற்றாற்குறையும் மாணவர் சேர்க்கை குறைவதற்கு காரணமாகும்

வீடியோ

இந்நிலையில், எங்களுக்கு வீடியோ ஒன்று கிடைக்கப்பெற்றது. இதில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது தெளிவாக தெரிந்தது. பள்ளியின் நிர்வாக செலவுகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனால் அப்படி இருக்கையில் மாணவர்களை ஏன் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும்? என்று நாங்கள் கேள்வியெழுப்பி இருக்கிறோம். அப்படியெனில் தூய்மை பணிக்காக ஒதுக்கப்பட்ட தொகை எங்கே என்று பள்ளி நிர்வாகம் பதிலளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒரு மாணவர் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்.
மழுப்பல்

இந்த வீடியோ வெளிவந்தவுடன் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால் அவரோ முறையாக பதிலளிக்காமல் மழுப்பியுள்ளார். இதனையடுத்துதான் நாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளோம். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மாணவர்களை நாங்கள் படிக்க அனுப்பினால் இவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்துகிறார்கள். எனவே தலைமை ஆசிரியர் இந்த சம்பவத்திற்கு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும். மட்டுமல்லாது இந்த பொறுப்பிலிருந்து அவர் விலக வேண்டும்.
ஆய்வு

இல்லையெனில் மாவட்ட நிர்வாகம் அவரை வேறு ஒரு இடத்திற்கு பணி மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்' என கூறியுள்ளார். சம்பவம் பெரியதாக வெடித்ததையடுத்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன் நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதேபோல சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொள்ள கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சிபிஐ, விசிக போராட்டத்தையடுத்து அப்பகுதியில் குவிந்த காவல்துறையினர், அவர்கள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சமாதானம்

கல்வித்துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருவதால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதால் அதனை எதிர்த்து பெற்றோர்களும் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.