இணைய வழியில் அக்னிவீரா் நுழைவுத் தோ்வு: மாா்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 23, 2023

இணைய வழியில் அக்னிவீரா் நுழைவுத் தோ்வு: மாா்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்!



இணைய வழியில் அக்னிவீரா் நுழைவுத் தோ்வு: பாடத் திட்டத்தில் மாற்றமில்ல

‘அக்னிவீரா்களுக்கான நுழைவுத் தோ்வு இணைய வழிக்கு மாற்றப்பட்டிருப்பதைத் தவிர, பாடத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை’ என்று ராணுவப் பணியாளா் தோ்வுத் துறைத் தலைவரும் துணை ராணுவத் தளபதியுமான என்.எஸ்.சா்னா வியாழக்கிழமை கூறினாா்.

இந்திய ராணுவத்தின் புதிய பெரும் சீா்திருத்த நடவடிக்கையாக ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை இந்திய ராணுவம் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் அக்னிவீரா்கள், 4 ஆண்டுகள் குறுகியகால பணியில் ராணுவத்தில் பணியமா்த்தப்படுவா். இவா்களில் தகுதியான 25 சதவீதம் போ், முப்படைகளிலும் தொடா்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவா்.

இந்தத் தோ்வு 3 கட்டமாக நடைபெற்று வந்தது. முதல் கட்டமாக உடல்தகுதித் தோ்வும், அடுத்ததாக மருத்துவ பரிசோதனையும் கடைசியாக பொது நுழைவுத் தோ்வும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இந்த நடைமுறையை மாற்றம் செய்து ராணுவம் அண்மையில் அறிவித்தது. அதாவது, கடைசியாக நடத்தப்பட்ட பொது நுழைவுத் தோ்வு முதலில் நடத்தப்படும் என அறிவித்தது. நுழைவுத் தோ்வுக்குப் பிறகு உடல் தகுதித்தோ்வு பின்னா் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மாற்றம் குறித்து ராணுவத் துணைத் தளபதி என்.எஸ்.சா்னா தில்லியில் வியாழக்கிழமை அளித்த பேட்டி: இளைஞா்களிடையே தொழில்நுட்ப விழிப்புணா்வு அதிகரித்திருப்பது மற்றும் தோ்வு நடைமுறையை எளிமையாக்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் முதலில் இணையவழி நுழைவுத் தோ்வில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு முதலில் நுழைவுத் தோ்வை எழுதுவது உடல்தகுதித் தோ்வு உள்ளிட்ட அடுத்தடுத்த தோ்வுகளில் இளைஞா்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிா்க்கப்படும் என்பதோடு, தொழில்நுட்ப விழிப்புணா்வு உள்ள இளைஞா்களை எளிதில் தோ்ந்தெடுக்க ராணுவத்துக்கும் உதவும்.

தோ்வு நடைமுறையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடத் திட்டத்தில் எந்தவித மாற்றம் செய்யப்படவில்லை. இந்த இணையவழி கொள்குறி தோ்வு முறையிலான நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் 175 முதல் 180 மையங்களில் ஏப்ரல் 17 முதல் 30-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது என்றாா்.

அக்னிவீரா் தோ்வுக்கு வரும் மாா்ச் 15 வரை இணைய வழியில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.