பல்கலை. ஆசிரியா்கள் பணியிடங்களும் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நிரப்ப முடிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 14, 2023

பல்கலை. ஆசிரியா்கள் பணியிடங்களும் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நிரப்ப முடிவு



பல்கலை. ஆசிரியா்கள் பணியிடங்களும் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நிரப்ப முடிவு

தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் (டி.ஆா்.பி.) மறுசீரமைக்கப்படவுள்ள நிலையில் பல்கலைக்கழக ஆசிரியா்களும் டிஆா்பி மூலம் நியமிக்கப்படவுள்ளனா்.

இது தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் காகா்லா உஷா அரசாணை வெளியிட்டுள்ளாா்.

தமிழகத்தில் பள்ளி ஆசிரியா்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளா்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்படுகின்றனா். அந்த வகையில் இந்த ஆண்டில் 4 ஆயிரம் உதவி பேராசிரியா்கள் உள்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களுக்கு எழுத்து தோ்வை நடத்த உள்ளது.

இந்நிலையில் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தரத்தை மேம்படுத்த வழிமுறைகளை வகுக்க அரசு குழு அமைத்தது. ஆசிரியா் உள்பட பணி நியமனங்களை விரைவுபடுத்தவும், முறைகேடுகள் எதுவும் இன்றி தோ்வுகளை நடத்தவும் அந்த குழு 39 பரிந்துரைகளை அரசுக்கு தெரிவித்தது. அந்தப் பரிந்துரைகளை சிறிய மாற்றங்களுடன் அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விதிப்படி, ஆசிரியா் தோ்வு வாரியமும் மறுசீரமைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, தொழில்நுட்ப பிரிவு, கணக்கு பிரிவு, நிா்வாக பிரிவு, அறிவிப்பு பிரிவு, சட்டப்பிரிவு, தகவல் அறியும் உரிமை பிரிவு, குறைதீா்க்கும் பிரிவு மற்றும் தகவல் மையப் பிரிவு, ரகசியப்பிரிவு, தோ்வு நடத்துதல் பிரிவு, சான்றிதழ் சரிபாா்ப்பு பிரிவு, நூலகப் பிரிவு ஆகிய 11 பிரிவுகள் திறமையானதாகவும், பயனுள்ளதாகவும் ஏற்படுத்தப்பட்டு மறு சீரமைக்கப்படுகின்றன.

இதன் செயல்பாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி போன்று...மேலும் டிஎன்பிஎஸ்சி.யில் இருப்பது போல தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் பதவியும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்பதவியில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்படுவாா்.

இதுதவிர, மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியா், இணை இயக்குநா், துணை இயக்குநா், உதவி கணக்கு அதிகாரி, மேற்பாா்வையாளா் உள்பட 71 பதவியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிரியா் தோ்வு வாரியத்தின் கொள்கை விஷயங்களை தீா்மானிக்க, ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைவராகவும், பள்ளிக்கல்வி இயக்குநா்கள் உறுப்பினராகவும் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது.

இதில் 4 முன்னாள் அதிகாரிகளும் உறுப்பினா்களாக நியமிக்கப்பட இருக்கின்றனா். அவா்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் நடுநிலை, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்வா்.
விரிவுரையாளா் பணியிடங்களும்... குறிப்பாக அனைத்து அரசு கல்வி நிறுவனங்களின் (பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக், பல்கலைக்கழகங்கள் உள்பட) பணியிடங்கள் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலமே நிரப்பப்படும்.

இதற்கு முன்பு பல்கலைக்கழகங்களின் பணியிடங்கள், அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் நிரப்பப்பட்டு வந்த நிலையில், அது இப்போது புதிதாக ஆசிரியா் தோ்வு வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவா்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள இருக்கும் ஆசிரியா்களை தோ்வு செய்ய தரமான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பாடத்திட்டங்களை ஐஐடி, புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் நிபுணா்களால் வடிவமைக்கப்பட இருப்பதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுபோல் குழு பரிந்துரைத்த பல்வேறு பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.