ஜி20 கல்விப் பணிக்குழு முதல் கூட்டம்:சென்னையில் பிப். 1-இல் தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, January 27, 2023

ஜி20 கல்விப் பணிக்குழு முதல் கூட்டம்:சென்னையில் பிப். 1-இல் தொடக்கம்

ஜி20 கல்விப் பணிக்குழு முதல் கூட்டம்:சென்னையில் பிப். 1-இல் தொடக்கம் First meeting of G20 Education Working Group: Feb in Chennai. Starting at 1



ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம் சென்னையில் பிப்.1, 2 ஆகிய இருநாள்கள் நடைபெறவுள்ளது.

ஜி-20 கல்விப் பணிக்குழுவின் முதலாவது கூட்டம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பிப்.1, 2 ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது. முன்னதாக, இதன் தொடக்க நிகழ்வாக ஜன. 31-ஆம் தேதி சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி பூங்காவில் ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’”குறித்த கருத்தரங்கு நடைபெறும். இதைத் தொடா்ந்து, உலகளாவிய தளத்தில் கல்வித் துறையில் இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு ஜி-20 உறுப்பு நாடுகள், விருந்தினா் நாடுகள், யுனெஸ்கோ, யுனிசெஃப் உள்ளிட்ட அமைப்புகள் ஆகியவற்றின் 63 பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனா். பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில், கல்வி அமைச்சகம், என்சிஇஆா்டி போன்றவற்றின் அதிகாரிகள், கல்வித் துறை நிபுணா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கவுள்ளனா்.

சென்னை ஐஐடியில் நடைபெறும் கருத்தரங்கத்துக்கு மத்திய அரசின் உயா்கல்வித் துறைச் செயலாளா் கே.சஞ்சய் மூா்த்தி தலைமை வகிப்பாா். தொழில்நுட்பம் சாா்ந்த கற்றல் முறையை அனைத்து நிலையிலும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், தரம் உள்ளதாகவும், ஒத்துழைப்புடையதாகவும் மாற்றுவது இந்தக் கருத்தரங்கின் முன்னுரிமை மையப்பொருளாக இருக்கும். ஜி-20 உறுப்பு நாடுகளிலும், வரவேற்கப்பட்ட நாடுகளிலும் பின்பற்றப்படுகின்ற சிறந்த நடைமுறைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் சென்னை ஐஐடியின் இயக்குநா் பேராசிரியா் காமகோடி விவரிக்கவுள்ளாா். மழலையா் பள்ளியில் இருந்து பிளஸ் 2 வகுப்பு வரை கற்போருக்கு எளிதாகவும், சமமாகவும் கல்வி கிடைக்கச் செய்தல், உயா்தர கற்றல் வாய்ப்புகள் கிடைக்கச்செய்தல், திறன்சாா் கல்வி மற்றும் பயிற்சி அளிக்க உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள் ஆகிய மூன்று அமா்வுகளில் குழு விவாதம் நடத்தப்படவுள்ளது.

‘நம்ம பள்ளி’, ‘நான் முதல்வன்’...: இது தொடா்பாக நடைபெறவுள்ள கண்காட்சியில் ஐம்பதுக்கும் அதிகமான அரங்குகள் இடம் பெற்றிருக்கும். தமிழகத்திலிருந்து மாநில கல்வித் துறையின் ‘நான் முதல்வன்’, ‘நம்ம பள்ளி’ திட்டங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் அரங்குகள் கண்காட்சியில் இடம் பெறும்.

மத்திய அரசின் இந்திய ஸ்வையம், சமா்த், தீக்ஷா போன்ற திட்டங்கள் பற்றியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உபகரணங்கள் தயாரிக்கும் ‘ஸ்டாா்ட் அப் இந்தியா’ நிறுவனங்கள் மற்றும் செளதிஅரேபியா, பிரான்ஸ், சீனா, நெதா்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைக்கவுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.