அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஏமாற்றம்! - இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை குறித்து குழு அமைப்பு ஏற்கத்தக்கதல்ல! - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 1, 2023

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஏமாற்றம்! - இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை குறித்து குழு அமைப்பு ஏற்கத்தக்கதல்ல! - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்



அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஏமாற்றம்! - இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை குறித்து குழு அமைப்பு ஏற்கத்தக்கதல்ல! - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் - Disappointing price hike announcement! - Committee structure on secondary teacher pay issue is not acceptable! - Emphasis on Primary School Teacher Alliance

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஏமாற்றம்!

*இடைநிலை ஆசிரியர் ஊதிய பிரச்சனை குறித்து குழு அமைப்பு- ஏற்கத்தக்கதல்ல!

*உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

ஊடகச் செய்தி

மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 01/2023 நாள்: 01.01.2023 அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஏமாற்றம்!

இடைநிலை ஆசிரியர் ஊதியப் பிரச்சனை குறித்து குழு அமைப்பு ஏற்கத்தக்கதல்ல!

உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்! தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு 01.07.2022 முதல் அறிவிக்க வேண்டிய 4 சதவீத அகவிலைப்படி உயர்வை 01.01.2023 முதல் வழங்குவதாக இன்று (01.01.2023) அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு விலைவாசி உயர்விற்கேற்ப ஆறு மாதத்திற்கு ஒருமுறை அதாவது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகள் முதல் அகவிலைப்படி உயர்வை வழங்கி வருகிறது. அவ்வாறு ஒன்றிய அரசு வழங்கும் தேதி முதல் மாநில அரசு ஊழியர்களுக்கு அதே சதவீதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்குவது என்பது கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துவரும் நடைமுறையாகும்.

இந்த நடைமுறையை தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் மாற்றிவிட்டது. கடந்த முறை அகவிலைப்படி உயர்வு வழங்கும் போதும் 01.01.2022 முதல் வழங்குவதற்குப் பதிலாக 01.07.2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்கியது. இதன் மூலம் ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை தமிழக அரசு பறித்துள்ளது. ஒவ்வொருமுறை இவ்வாறு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதும் 6 மாத அகவிலைப்படி உயர்வைத் தமிழக அரசு பறித்துக் கொள்வது என்பது புதிய நடைமுறையாகவும், ஏற்க இயலாத ஒன்றாகவும் உள்ளது. ஏற்கனவே கடந்த அ.தி.மு.க அரசு தற்காலிகமாகப் பறித்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை நிரந்தரமாகப் பறித்துவிட்டது இன்றைய தி.மு.க அரசு. கடந்த அரசு பறித்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தையும் நிரந்தரமாக நிறுத்தி உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு தனது அறிவிப்பில் இடைநிலை ஆசிரியர்களின் “சம வேலைக்குச் சம ஊதியம்” குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித்துறைச் செயலாளர் - செலவினம் அவர்களின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை

முதன்மைச் செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது ஏமாற்று வேலையாகும். இது முழுக்க முழுக்க காலங்கடத்தும் நடவடிக்கையாகும். இதேபோன்று CPS உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுக்களின் நிலை மற்றும் செயல்பாடுகள் பற்றி பல கசப்பான அனுபவங்கள் நமக்கு உள்ளன.

ஏற்கனவே கடந்த காலங்களில் ஊதியக்குழுக்கள் தொடர்பாக திருமதி.மாலதி IAS, திரு.கிருஷ்ணன் IAS மற்றும் திரு.ராஜீவ் ரஞ்சன் IAS ஆகியோர் தலைமையில் தனித்தனியே அவ்வப்போது அமைக்கப்பட்ட குழுக்கள் தங்களது அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் பற்றி தெரிவித்த கருத்துக்கள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதை மறக்க முடியாது இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு என்பதும், குறிப்பாக 01.06.2009க்குப் பின்பு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் அதளபாதாளத்தில் உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே. இம்முரண்பாட்டைச் சரி செய்வோம் என்று தான் தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையின் வரிசை எண்: 311-ல் தி.மு.க தெரிவித்தது.

எனவே, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து குழு அமைத்து ஆய்வு செய்வதற்கு எதுவுமே இல்லை என்பது தான் உண்மை. எனவே, தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை உடனடியாகச் சரி செய்து ஆணை வெளியிட வேண்டும்.

44 ஆண்டுகள் கடுமையாகப் போராடிப் பெற்ற ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் கடந்த இரண்டு ஊதியக்குழுக்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டது. அதன் விளைவு தான் இன்று இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு. இந்த அநீதியை எதிர்த்து கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராடி வருகிறது.

இந்த ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து தனிச்சங்கமாகத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 26.11.2018ல் மாவட்டத் தலைநகரங்களில் நடத்திய அரசாணை எரிப்புப் போராட்டத்தில் 12000 பேர் பங்கேற்றனர். அன்று 5000 பேர் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் காவல் வைக்கப்பட்டனர். மாநிலம் முழுதும் 1572 பேர் மீது குற்றவியல் வழக்குகள் புனையப்பட்டன. அந்த 1572 பேர் மீதும் கல்வித்துறை 17(ஆ) நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் அவர்கள் பதவி உயர்வு உள்ளிட்டவற்றை இழந்தனர். இப்படியான தொடர் போராட்டங்கள் இன்று வரை நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் இனிமேலும் குழு அமைப்பது என்பது ஏற்புடையதல்ல. எனவே, தமிழக அரசு இனிமேலும் காலதாமதம் செய்யாமல் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனையை உடனடியாகச் சரிசெய்திட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.