பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான தேர்வுக் கட்டண விவரம் வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 27, 2022

பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான தேர்வுக் கட்டண விவரம் வெளியீடு!

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை 600 006

பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச் / ஏப்ரல் 2023 தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் செய்திக் குறிப்பு

நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதுவதற்கும், முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்

மார்ச் / ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், 26.12.2022 (திங்கட்கிழமை) முதல் 03.01.2023 (செவ்வாய்க்கிழமை) வரையிலான நாட்களில் (31.12.2022 (சனிக்கிழமை) மற்றும் 01.01.2023 (ஞாயிற்றுக் கிழமை) நீங்கலாக ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு (Service centres) நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

தத்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள் மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 05.01.2023 (வியாழக்கிழமை) முதல் 07.01.2023(சனிக்கிழமை) வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்-லைனில் தத்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள்

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் (Government Examinations Service centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.

தொழிற்பயிற்சி (ITI) பயின்ற மாணவர்கள்

அரசாணை (நிலை) எண்.. 34, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு (எஸ் 1) துறை, நாள்.30.03.2022-ன் படி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) -க்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தேர்வுகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் வாயிலாக மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கால அட்டவணை

மார்ச் / ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால் அட்டவணைகளை https://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.