அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 26, 2022

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல்!

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல்!

அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு, இந்த மாதம் சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு நிதி உதவி பெறக்கூடிய பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அத்தகைய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பள பட்டியல் மாதம் தோறும் 20ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்படும். அதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கையெழுத்திட்ட பின் கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆசிரியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில், ஏற்கனவே இருந்த மாவட்ட கல்வி அலுவலகங்களின் எண்ணிக்கை 120-லிருந்து 152-ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் பல மாவட்ட கல்வி அலுவலர்கள் இன்னும் முழுமையாக பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் இதுவரை பெறப்படவில்லை.

இதனால் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கும் சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது. பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் புதிய இடங்களில் சேர்ந்து வருகின்றனர். அவர்களுக்கான நிதி பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததால், இந்த மாதத்திற்கான ஊதியம் கிடைப்பதில் மட்டும் தாமதம் ஏற்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.