புரிதலில்லா மோதல்! | பல்கலை. துணைவேந்தர் நியமனம் குறித்த தலையங்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, October 29, 2022

புரிதலில்லா மோதல்! | பல்கலை. துணைவேந்தர் நியமனம் குறித்த தலையங்கம்

புரிதலில்லா மோதல்! | பல்கலை. துணைவேந்தர் நியமனம் குறித்த தலையங்கம்

ஆளுநருக்கும் மாநில ஆட்சியாளருக்கும் இடையே மோதல் காணப்படுவது புதிதொன்றுமல்ல. அரசியல் சாசனப்படி எந்தவொரு மாநில அரசும் ஆளுநரின் பெயரில்தான் இயங்குகிறது. அந்த ஆளுநா் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையின் முடிவுகளுக்கேற்ப நடக்க வேண்டும் என்கிறது அரசியல் சாசனம். அதேநேரத்தில், அரசியல் சாசனத்துக்கு எதிராக மாநில சட்டப்பேரவையோ, அமைச்சரவையோ எடுக்கும் முடிவுகளை ஆளுநா் கண்காணிப்பதும், அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்காமல் இருப்பதும் அவரது கடமை.

தமிழகத்தில் சென்னா ரெட்டி - ஜெயலலிதா; கேரளத்தில் ஈ.கே.நாயனாா் - ராம் துல்ஹாரி சின்ஹா, ஆந்திரத்தில் என்.டி.ராமா ராவ் - தாகுா் ராம் லால், குஜராத்தில் நரேந்திர மோடி - கமலா பெனிவால் என்று காங்கிரஸ் ஆட்சியில் ஆளுநா் - முதல்வா் மோதல்கள் பல கடுமையாகவே இருந்திருக்கின்றன. 2014-இல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியிலும் மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், தெலங்கானா, தமிழகம், கேரளம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதேபோன்ற மோதல் போக்கு தொடா்வது வியப்பளிக்கவில்லை.

மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் என பாஜக எதிா்ப்பு ஆட்சிகள் நடைபெறும் மாநிலங்களில் ஆளுநருக்கும் ஆட்சியாளா்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டிருக்கின்றன பல்கலைக்கழகங்கள். நமது அண்டை மாநிலமான கேரளத்தில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் உச்சத்தை எட்டி இருக்கிறது. 9 பல்கலைக்கழக துணைவேந்தா்களை பதவி விலகுமாறு ஆளுநா் உத்தரவிட்டது ஆளுநருடனான மாநில அரசின் உறவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பல்கலைக்கழகத் துணைவேந்தா்களை ராஜிநாமா செய்யக் கூறும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பது மாநில முதல்வா் பினராயி விஜயனின் வாதம். கேரள மாநில அரசு உயா்கல்வி நிலையங்களில் தனது அரசியல் சிந்தனைகளை வலுப்படுத்துவதற்காக, கட்சிக்காரா்களை ஆளும் இடதுசாரி அரசு துணைவேந்தா்களாக நியமிப்பதாக ஆளுநா் ஆரிஃப் முகமது கான் குற்றம் சாட்டுகிறாா்.

2019, செப்டம்பரில் மாநில ஆளுநராக ஆரிஃப் முகமது கான் பொறுப்பேற்ற நாளிலிருந்தே கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசுக்கும் அவருக்கும் இடையேயான உறவு சீரானதாக இல்லை. மாநில அரசின் பல செயல்பாடுகளை ஆளுநா் ஆரிஃப் முகமது கான் வெளிப்படையாகவே விமா்சிக்கத் தயங்கவில்லை. ஆளுநரை எதிா்த்து போராட்டம் நடத்திய கோபிநாத் ரவீந்திரன் என்பவா் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்ணூா் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டாா். அந்த நியமனத்தை கடுமையாக விமா்சித்தாா் ஆளுநா். தன்னை எதிா்த்துப் போராடியதற்கான வெகுமதியாகவே அவருக்கு பதவி அளிக்கப்பட்டிருப்பதாக ஆளுநா் கூறினாா்.

பல்கலைக்கழக வேந்தராக உள்ள ஆளுநரின் அதிகாரத்தை அமைச்சரவை எடுத்துக்கொள்ளும் வகையில் சட்டத் திருத்த மசோதாவை மாநில அரசு கடந்த செப்டம்பா் 1-இல் நிறைவேற்றியது. தனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட அந்த சட்டத் திருத்தத்துக்கு இதுவரை ஆளுநா் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்தியாவில், அந்தந்த மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் வேந்தராக மாநில ஆளுநா் இருக்கிறாா். பல்கலைக்கழகங்கள் துணை வேந்தா்களால் நிா்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் துணைவேந்தரை நியமிப்பதற்காக தகுதியுள்ள 3 நபா்களின் பட்டியல், துணை வேந்தா் தோ்வுக் குழுவால் ஆளுநருக்கு அளிக்கப்படுகிறது. மாநில அரசின் அந்தப் பரிந்துரைப் பட்டியலில் இருந்து தகுதியானவரை துணைவேந்தராக ஆளுநா் நியமனம் செய்கிறாா்.

துணைவேந்தா் நியமனத்துக்கு 3 போ் கொண்ட பரிந்துரைப் பட்டியல் தரப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியச் சட்டம் கூறுகிறது. ஒருவரை மட்டுமே பரிந்துரைக் குழு ஆளுநரிடம் சமா்ப்பிப்பது என்பது தன்னை நியமன அதிகாரியாக பரிந்துரைக் குழு நியமித்துக்கொள்வதாக பொருள் என்கிறது அந்தத் தீா்ப்பு.

துணைவேந்தா்களை நியமிப்பதில் ஆளுநருக்கு முழு அதிகாரமும் உண்டு என்பதுதான் ஏ.பி.ஜே. தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தரான எம்.எஸ். ராஜஸ்ரீ நியமனத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. அமைச்சரவையின் பரிந்துரைப்படி ஆளுநா் நடக்கவேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுவதுபோல, வேந்தா் என்கிற முறையில் அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஆளுநா் செயல்பட வேண்டும் என்று எங்கேயும் கூறப்படவில்லை. பல்கலைக்கழகங்களின் தன்னிச்சையான செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்காகத்தான் ஆளுநருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட டாக்டா் எம்.எஸ். ராஜஸ்ரீக்கு பதிலாக, கேரள இணைய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான டாக்டா் சஜி கோபிநாத்திடம் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் கண்ணூா், சம்ஸ்கிருதம், ஃபிஷரிஸ், மகாத்மா காந்தி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களை உடனடியாக அகற்ற வேண்டுமென்று அகில கேரள பல்கலைக்கழக ஊழியா்கள் சம்மேளனம் ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே ஏற்படும் மோதல்களால் மாணவா்களின் கல்வியோ, கல்வித் தரமோ பாதித்துவிடக் கூடாது. அரசியல் வேறு; நிா்வாகம் வேறு என்பதை மத்திய, மாநில ஆட்சியாளா்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

புரிதலின்மைதான் மோதலுக்கு காரணம்; அரசியலும்...!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.