JEE தோ்வில் மோசடி நடந்தது எப்படி? விசாரணையில் திடுக்கிடும் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 3, 2022

JEE தோ்வில் மோசடி நடந்தது எப்படி? விசாரணையில் திடுக்கிடும் தகவல்

JEE தோ்வில் மோசடி நடந்தது எப்படி? விசாரணையில் திடுக்கிடும் தகவல் - How did cheating happen in jee exam? Shocking information in the investigation

ஜேஇஇ தோ்வில் மோசடி நடந்தது எப்படி? விசாரணையில் திடுக்கிடும் தகவல்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ-மெயின்ஸ் தோ்வில் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ரஷிய நபரை சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட ரஷிய நபர், தொழில்நுட்பத்தில் ஊடுருவி எந்த விதமான மின்னணு கருவிகளையும் ஹேக் செய்யும் நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) சோ்வதற்கான ஜேஇஇ நுழைவுத்தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இணையவழியில் நடைபெற்ற ஜேஇஇ மெயின்ஸ் தோ்வில் அஃபினிட்டி எஜுகேஷன் என்ற தனியாா் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த நிறுவனமானது பல்வேறு மோசடியாளா்களுடன் இணைந்து இணையவழித் தோ்வுக்கான கேள்வித்தாளைத் தோ்வுக்கூடத்துக்கு வெளியில் இருந்து தொடா்புகொண்டு, தேர்வெழுதிய நபர்களின் கணினிகளை ரிமோட் ஆக்ஸஸ் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தேர்வர்களுக்கு பதிலாக, வெளியிலிருந்து இவர்கள் பதிலளிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

ஹரியாணா மாநிலம் சோனேபட்டில் உள்ள ஒரு தனியார் தேர்வு மையத்தில் இந்த மோசடி நடந்ததும், தேர்வு மைய ஊழியர்களும் இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களிடம் பெரிய அளவில் தொகையை வாங்கிக் கொண்டு, மோசடியில் ஈடுபட்டு அவர்களுக்கு என்ஐடியில் சேர்க்கை பெற உதவியதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள், தங்கள் பாதுகாப்புக்காக ஜேஇஇ தேர்வில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்களிடமிருந்து பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வாங்கி வைத்துக் கொள்வதும், பின்தேதியிட்ட காசோலையை பெற்றுக் கொள்வதும், உயர் கல்வி நிலையங்களில் சேர்க்கை கிடைத்ததும் 12 முதல் 15 லட்சம் பெற்றுக் கொள்வதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநா்கள் மூவரிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தியிருந்தது. இந்நிலையில், வழக்குடன் தொடா்புடைய ரஷிய நபரை சிபிஐ திங்கள்கிழமை கைது செய்தது.

அவருக்கு எதிராக ஏற்கெனவே லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்நபா் வெளிநாட்டில் இருந்து தில்லி விமான நிலையத்துக்கு வந்தபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா். அவரைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகளை சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.