கல்வி அதிகாரி பதவியை மறுத்த ஹெச்.எம்.கள் - HMs who refused the post of Education Officer - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 3, 2022

கல்வி அதிகாரி பதவியை மறுத்த ஹெச்.எம்.கள் - HMs who refused the post of Education Officer

கல்வி அதிகாரி பதவியை மறுத்த ஹெச்.எம்.கள் - HMs who refused the post of Education Officer

பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் பணியிடங்களை வேண்டாம் என தலைமை ஆசிரியர்கள் புறக்கணித்ததால் 31 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி துறையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் நிர்வாக ரீதியாக அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொண்ட சீரமைப்புகளை ரத்து செய்து புதிதாக சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதன்படி தொடக்க கல்வி நிர்வாகத்துக்கு மாவட்டம் தோறும் தனி கல்வி அதிகாரி தனியார் பள்ளிகள் அனைத்தையும் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த வகையில் தொடக்க பள்ளிகளை நிர்வகிக்கும் வட்டார வள அதிகாரியான பி.இ.ஓ. பதவியில் 81 இடங்களை நிரப்ப கடந்த வாரம் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

பணி மூப்பு அடிப்படையில் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 250க்கும் மேற்பட்டோர் சென்னையில் நடந்த கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர்.கவுன்சிலிங்கில் பங்கேற்க வந்த 50 பேர் மட்டும் தங்களுக்கு பி.இ.ஓ. பதவியில் பணியாற்ற சம்மதம் தெரிவித்து அதற்கான உத்தரவை பெற்றனர். மற்றவர்கள் 'பி.இ.ஓ. என்ற அதிகார பதவி வேண்டாம்; பள்ளி தலைமை ஆசிரியர் பணியிலேயே தொடர்கிறோம்' எனக்கூறி பதவி உயர்வை புறக்கணித்தனர். இதனால் 31 பி.இ.ஓ. இடங்கள் காலியாக உள்ளன.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

முன்பெல்லாம் கல்வித் துறை அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக கல்வி துறையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பு என்ற குளறுபடி உள்ளது. மாணவர்களின் கற்பித்தல் பணிகளை கவனிப்பதை விட அரசியல் ரீதியான பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

அமைச்சர் தரப்பு அரசியல் ரீதியான உத்தரவிட்டால் ஐ.ஏ.எஸ். தரப்பு அதற்கு முரண்பாடாக உத்தரவிடுகின்றனர். கற்பித்தல் பணிகளை விட புள்ளி விபரங்களை சேகரிக்க கூடுதல் பணி சுமை வழங்குகின்றனர். ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்ற முறையில் புள்ளி விபரம் சேகரிக்கவே திணறும் நிலையில் பல பள்ளிகளை ஒருங்கிணைக்கும் பி.இ.ஓ. என்ற அதிகார பதவியில் கூடுதல் நெருக்கடி உள்ளது. அதனால் பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் பி.இ.ஓ. பதவியை விரும்பவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.