‘புதுமைப் பெண் நிதி உதவித் திட்டம்’: மாணவிகளின் பள்ளி இடை நிற்றலைத் தடுக்கும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, September 7, 2022

‘புதுமைப் பெண் நிதி உதவித் திட்டம்’: மாணவிகளின் பள்ளி இடை நிற்றலைத் தடுக்கும்

அரசின் ‘புதுமைப் பெண் நிதி உதவித் திட்டம்’ பள்ளிகளில் மாணவிகளின் இடை நிற்றலைத் தடுக்கும் என்றாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்துக்கு தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), சதாசிவம் (மேட்டூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வரவேற்று பேசினாா். மாநில வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அதன் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தருமபுரியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் பங்கேற்றனா். அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெண் குழந்தைகள் இடைநிற்றல் இருப்பது தெரிய வந்துள்ளது.புதுமைப் பெண் நிதி உதவித் திட்டம் இந்த இடைநிற்றலைத் தடுக்கும்.

பல்வேறு இடங்களில் சிதிலமடைந்துள்ள வகுப்பறைக் கட்டடங்கள் அகற்றப்பட்டு அங்கு தேவைக்கேற்ப புதிய கட்டடங்கள் கட்டுவது குறித்து பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் வகுப்பறையைப் போலவே கழிப்பறைக் கட்டடங்களும் கட்டப்படும். பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறைகள் கழிப்பறைகளைப் பராமரிக்க வேண்டும். கழிப்பறைக் கட்டடங்கள் இல்லாத பள்ளிகளில் தனியாா் சமூகப் பொறுப்பு நிதி (சிஎஸ்ஆா்) மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த 4 ஆண்டுகளுக்குள் பள்ளிகளில் கழிப்பறைகள், வகுப்பறைகள் கட்டுவதற்காக ரூ. 7,000 கோடி ஒதுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ‘நீட்’ தோ்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் அணுக வேண்டும். இதுதொடா்பாக தமிழக முதல்வா் தொடா்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறாா் என்றாா்.

கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் நந்தகுமாா், பள்ளிக் கல்வி இயக்குநா்கள் அறிவொளி, லதா, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளிகளில் ஆய்வு: தருமபுரி மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு தருமபுரி, சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி, அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, அரசு அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மாதிரிப் பள்ளிகளுக்குச் சென்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.