அரசு ஊழியர்களின் ரூ.6,000 கோடி எங்கே? - Kalviseithi Official

Breaking

Sunday, September 25, 2022

அரசு ஊழியர்களின் ரூ.6,000 கோடி எங்கே?

கடந்த 2006 சட்டசபை தேர்தலுக்கு முன், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ' பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. 

அரசு ஊழியர்களின் ரூ.6,000 கோடி எங்கே?

தேர்தல் நேரத்தில் கேட்டால், அரசு பணிந்து விடும் என்பது, அவர்களின் கணக்காக இருந்திருக்கலாம்.அதனால், சற்று கூடுதலாகவே கேட்டனர். அன்றைய முதல்வர் ஜெயலலிதா, 'தி.மு.க.,வின் துாண்டுதலால் தான் இவர்கள் போராட்டம் செய்கின்றனர்' என்று நினைத்தார். விளைவு, ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
'நம்பிக்கை மாநாடு'

அன்று நள்ளிரவில், ஜாக்டோ - ஜியோ தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து, 'எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று காட்டினர். அன்றில் இருந்து ஜக்டோ - ஜியோ, தி.மு.க.,வின் பிரிவாகவே செயல்படுகிறது என்று, ஊழியர் மத்தியில் முணுமுணுக்கப்பட்டது. ஜெயித்து வந்த கருணாநிதி, தமிழக மக்களுக்கு கலர் 'டிவி'யும், உள்ளத்தில் இடமும் கொடுத்தார். கடந்த வாரம் சனிக் கிழமை 'நம்பிக்கை மாநாடு' என்ற பெயரில் நடத்தப்பட்ட விழாவில், அரசு ஊழியர்களை சந்தித்தார், முதல்வர் ஸ்டாலின். ஜாக்டோ - ஜியோ, 60 கோரிக்கைகளை முன்வைத்தது. 'அதில் பலவற்றை நாங்கள் நிறைவேற்றி விட்டோம். உதாரணமாக, ஜி.எஸ்.டி.,யை எதிர்ப்போம் என்று கூறினோம்; அதை நிறைவேற்றி விட்டோம். புதிய கல்வி கொள்கையை எதிர்ப்போம் என்று கூறினோம்; அதை நிறைவேற்றினோம்' என்று, அரசு ஊழியர் பிரச்னைக்கு சற்றும் சம்பந்தமில்லாத செய்திகளை, தனக்கே உரிய தாலாட்டு பாணியில் உரையாற்றினார்.
பிரதிநிதிகள் வெளிநடப்பு

உறங்குவர் என்று எதிர்பார்த்தால், ஜாக்டோ -ஜியோ முதன்முறையாக விழித்து கொண்டது. கூட்டத்தில் இருந்த பெரும்பான்மை பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். முதன்முறையாக முதல்வர் முகத்திலும் கவலை கலந்த பயம் தெரிந்தது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல, 'அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கிறோம்' என்றார். ஏதோ தன் கைக் காசை கொடுப்பதை போல அலுத்து கொண்டார். அரசு ஊழியர்கள் கேட்கும் கேள்வி இது தான். '2022 ஆண்டுக்கான பஞ்சப்படியில், ஆறு மாத படியை, அதாவது 6,000 கோடி ரூபாயை கொடுக்கவில்லை. அந்த பணம் எங்கே போனது? கணக்கு தர முடியுமா? அமெரிக்க மாப்பிள்ளையான நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வாரா?' என்பது தான்.இன்னுமொரு மகா கொடுமை. அரசு ஊழியருக்கான 'பென்ஷன்' பணம் மாயமாக மறைந்த விவகாரம்.'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்' என்று ஒரு பென்ஷன் திட்டம் 2003ல் இருந்து செயல்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட பணம், இப்போது மாயமாகி உள்ளது.

கடன் பத்திரம்

இதற்கு ஆதாரம், பென்ஷன் தர முடியாமல் ஊழியர்களின் வயதை, இரண்டு ஆண்டுகள் நீட்டித்தது தான்.அது மட்டுமல்ல, இதை கடந்தும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணத்திற்கு மாற்றாக, கடன் பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.பத்திரம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? பணம் இல்லை என்பது தானே? 20 ஆண்டு களாக வசூலித்த பணம் வைப்பு நிதியாக அல்லவா வைத்திருக்க வேண்டும்? எப்படி மாயமானது? இது அரசின் பணம் அல்ல; ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து, அரசிடம் கொடுத்து வைத்த பணம். தன் மக்களிடமே திருடும் அரசை என்னவென்று சொல்வது?இன்னுமொரு கேவல மான செயலும் நடந்துஉள்ளது. போக்குவரத்துத் துறையின் அனைத்து சொத்துக்களும் அடகு வைக்கப்பட்டுள்ளன.உதாரணமாக, பஸ் டிப்போக்களின் நிலம் முழுதும் ஏதோ ஒரு வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளது.இப்படி அடகு வைக்கப்படாத டிப்போ எதுவுமே இல்லை. என்றாவது ஒரு நாள், ஏதாவது ஒரு வங்கி டிப்போவை இழுத்து மூடினால் ஆச்சரியப்படாதீர்கள்; எல்லாம் திராவிட மாடலின் செயல். உதாரணமாக சென்னையில் வடபழநி டிப்போ, கரூர் வைஸ்யா வங்கியிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது என்பது, அந்த வங்கியின் தணிக்கையின் போது தெரிய வந்துள்ளது. இந்த திராவிட மாடல் அரசு வாய் கூசாமல், 'மத்திய அரசு கார்ப்பரேட்டுக்களுக்காக செயல்படுகிறது' என்று கூறுகிறது.

நம்ப முடியாத ஊழல்

மேலும் ஒரு நம்ப முடியாத ஊழல்; ஆனால் உண்மை.டாஸ்மாக்கை நம்பி நிர்வாகம் செய்யும் அரசு, மது பார்களை மட்டும் விட்டு விடுமா? தமிழகத்தில் ஏறக்குறைய 7,000 மது பார்கள் உள்ளன. இதுநாள் வரை இவற்றுக்கு, 'லைசென்ஸ்' என்று ஒன்று இருந்தது.இவர்கள், அரசுக்கு தங்களது விற்பனையில் 3 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும். இதன் வாயிலாக அரசுக்கு 7,000 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கிடைத்து வந்தது. இப்போது எந்த பாருக்கும், லைசென்ஸ் வழங்கியதாக தெரியவில்லை. 

  அப்படியானால், அந்த பணம் எங்கே போனது அல்லது போகிறது?வரிவிலக்கு கொடுக்க பார் ஒன்றும் அனாதை ஆசிரமமோ அல்லது 'கோபாலபுரத்து நிதிகள்' நடித்த படமோ அல்லவே? அப்படியே வரிவிலக்கு கொடுத்திருந்தால், அரசுக் குறிப்பில் வந்திருக்க வேண்டுமே? இது தான் திராவிட மாடல்.எதற்கெடுத்தாலும் பணமில்லை. ஆனால், திட்ட செலவுகளுக்கு மட்டும் பணம் உடனே வருகிறது. அந்த மர்மம் என்ன? பூங்கா, பேனா, மணிமண்டபம் என எல்லாம் ஜோராக நடக்கிறது.சும்மாவா கூறினர், 'விஞ்ஞான முறை ஊழல்' என்று!

- நமது நிருபர் --


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.