``பள்ளி போகாத ஆசிரியருக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருக்கிறது'' - கல்வியாளர் வருத்தம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 9, 2022

``பள்ளி போகாத ஆசிரியருக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருக்கிறது'' - கல்வியாளர் வருத்தம்

ஒவ்வொரு வருடமும், டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவதோடு, அன்றைய தினம் கல்விப்பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது.

நல்லாசிரியர் விருது பெறுவதற்கு ஏற்கெனவே இருக்கும் விதிமுறைகளோடு, மேலும் சில பரிந்துரைகளை இந்த வருடம் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நல்லாசிரியர் விருதுக்கான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க மாவட்டந்தோறும் 5 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். அக்குழு, டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள், அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருக்கிற ஆசிரியர்கள், புகார்களில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் ஆகியோரைத் தவிர்த்துவிட்டு, சிறந்த முறையில் கல்விப் பணியாற்றிய ஆசிரியர்களை மட்டும் நல்லாசிரியர் விருதுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாகக் கல்வியாளர் சோம சுந்தரம் அவர்களிடம் பேசினோம்.

''இத்தனை நாள் வரை நல்லாசிரியர்களுக்கான விருது வழங்குவதில் அரசியல், சிபாரிசு போன்ற தலையீடுகள் இருந்து வந்தன என்பது உண்மைதான். 'என்னிடம் டியூஷன் படிக்க வேண்டும்' என்று வற்புறுத்துகிற ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பள்ளிக்கூட நிர்வாகத்துக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கூடத்துக்கே போகாத ஆசிரியர்களுக்கெல்லாம்கூட நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

நல்லாசிரியர் என்பவர், அந்த ஆசிரியர் தன்னிடம் படிக்கிற மாணவர்களுக்கு இரண்டாவது பெற்றோராக இருக்க வேண்டும். இதுதான் முதல் தகுதி.

மாதத்துக்கு இரண்டு தாமதம், ஒரு பர்மிஷன், வருடத்துக்கு 12 கேஷுவல் விடுமுறை வழங்கப்பட்டாலும், அவற்றையெல்லாம் பயன்படுத்தாமல், விடுமுறையே எடுக்காமல் பள்ளிக்கு வந்து பாடம் நடத்துகிற ஆசிரியர்களும் பலர் இருக்கிறார்கள். நல்லாசிரியர் விருதுக்கு இது இரண்டாவது தகுதி.
கல்வியாளர் சோமசுந்தரம்

`முன்பு பள்ளியில் 71 மாணவர்கள்; இப்போது 816 மாணவர்கள்!' - `நல்லாசிரியர்' ஆஷா தேவியின் நம்பிக்கை கதை நல்லாசிரியர் விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிற ஆசிரியரை, பிரின்சிபல் மட்டுமே சிபாரிசு செய்யாமல், 5 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்துத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது ஆரோக்கியமான விஷயம்.

என்னைப் பொறுத்தவரை, அந்தக் குழுவில் குறைந்தபட்சம் 6 பேர் இருக்க வேண்டும். அந்தக் குழுவில் மூத்த ஆசிரியர்களும், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் தலைவர் மற்றும் செயலாளரும் இடம்பெற வேண்டும். குழு உறுப்பினர்கள், பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு, அவர்கள் மீதான புகார் போன்றவற்றை விசாரிப்பதோடு, டியூஷன் சொல்லிக் கொடுக்கிறாரா என்பதையும் விசாரிக்க வேண்டும். இப்படி நடக்கும்பட்சத்தில் தகுதியில்லாதவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை.

ஆசிரியர் உலகத்தின் உயரிய விருது நல்லாசிரியர் விருது. அது ஜாதி, மதம், விருப்பு, வெறுப்பு கடந்து நல்ல ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்'' என்கிறார் கல்வியாளர் சோம சுந்தரம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.