அரசு அலுவலர்கள் பதவி உயர்வு விதிமுறை: தமிழக அரசு உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 6, 2022

அரசு அலுவலர்கள் பதவி உயர்வு விதிமுறை: தமிழக அரசு உத்தரவு

'
ஓய்வு பெறவுள்ள நிலையில், செயற்கையாக காலிப் பணியிடங்களை ஏற்படுத்தி, பதவி உயர்வு வழங்குவதும், தகுதி உள்ள அலுவலர்கள், பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதும் தவிர்க்கப்பட வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணை:அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் நாளில் அல்லது அதற்கு சில நாட்கள் முன்னதாக, பதவி உயர்வு அளிப்பதற்கு வசதியாக, பணியில் உள்ள மூத்தோர் விடுப்பில் செல்கின்றனர்.அதனால் ஏற்படும் செயற்கையான காலிப் பணியிடங்களில், சிலரை பதவி உயர்வு அளித்து அமர்த்துவதை, கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.அரசு பணியாளர்கள் உரிய காலத்தில், பதவி உயர்வு பெற வசதியாக, பெயர் பட்டியலை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கவும், அறிவுரைகள் வழங்கப்பட்டன. எனினும் சில நிகழ்வுகளில், பெயர் பட்டியல் தாமதமாக வெளியிடப்பட்டு, முழு தகுதி உடையோருக்கு உரிய காலத்தில், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்படுகிறது.சில அலுவலர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் அல்லது சில நாட்களுக்கு முன்னர், பதவி உயர்வு வழங்க, செயற்கையாக காலிப் பணியிடங்கள் ஏற்படுத்துதல், பதவி நிலை உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பதவி உயர்வுக்கான முறை வரும் முன்பாகவே, பதவி உயர்வு வழங்க வசதியாக, பதவி நிலையை உயர்த்தி, பணப் பலன்களுக்காக கருத்துருக்கள் ஏற்படுத்துவது, அரசின் கவனத்திற்கு வந்தது.எனவே, நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் அறிவுறுத்தலுக்கு இணங்க, ஒவ்வொரு ஆண்டும் காலதாமதமின்றி உரிய காலத்தில், பதவி உயர்வுக்கு தேர்ந்தெடுத்தோர் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டு, முறையான பதவி உயர்வுகள் வழங்கப்பட வேண்டும். இதன் வழியாக, தகுதியுள்ள அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல், ஓய்வு பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.சில அரசு அலுவலர்களுக்கு சாதகமான வகையில், அவர் ஓய்வு பெறுவதற்கு சில நாட்கள் முன்னதாகவோ, ஓய்வு பெறும் நாளன்றோ பதவி உயர்வு வழங்கும் வகையில், செயற்கையாக காலிப் பணியிடத்தை ஏற்படுத்தும் செயல்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.இதை அனைத்து நியமன அலுவலர்களும், தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.