பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 25 லட்சம் பஸ் பாஸ் தயாரிக்கும் பணி தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 22, 2022

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 25 லட்சம் பஸ் பாஸ் தயாரிக்கும் பணி தொடக்கம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 25 லட்சம் பஸ் பாஸ் தயாரிக்கும் பணி தொடக்கம்: போக்குவரத்து துறை உயரதிகாரி தகவல்

சென்னை: தமிழக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் வகையில் 25 லட்சம் பஸ் பாஸ் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக அரசு மாநிலத்தில் கல்வியறிவு விகிதத்தை அதிகரிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களை ஊக்குவிக்கவும், சமுதாயத்தில் அவர்களின் நிலையை மேம்படுத்தவும், இளைஞர்கள் தங்களது தரத்தை மேம்படுத்தி சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலையை அடையவும், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் பயணம் செய்யும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயணச் சலுகைகளை வழங்குகிறது.

இதன்படி அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகள் (1-12ம் வகுப்பு வரை), தேசிய குழந்தை மற்றும் தொழிலாளர் திட்ட நலப்பள்ளி, அரசு பல்தொழில்நுட்பப் பயிலங்கள், அரசு தொழிற்பயிற்சிக் கூடங்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சமுதாயக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சிக் கூடங்கள், இசைக் கல்லூரிகள், சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் இலவசமாக பயணிக்க முடியும்.

இதுபோல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்லூரிகள், தனியார் தொழில்நுட்ப பயிலகங்கள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் 50 சதவீத கட்டணச் சலுகையை பயன்படுத்தி பயணிக்க முடியும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸானது அவர்கள் பயிலும் இடங்களில் வழங்கப்படும். ஆனால் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் நடப்பாண்டில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தயாரித்து வழங்குவதற்கான பணியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கொரோனா காரணமாக மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அச்சடித்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அதே நேரம் பழைய பஸ் பாஸ்களை நடத்துநர்களிடம் காண்பித்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் கல்வி நிலையம் சென்று வர அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும் சீருடை அணிந்திருந்தாலே மாணவர்களை பேருந்துகளில் இருந்து இறக்கிவிடக் கூடாது என நடத்துநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் எவ்விதமான தடையும் இல்லாமல் பேருந்துகளில் பயணித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பேருந்து பயண அட்டை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் பள்ளிகளிடமிருந்து பேருந்து பணிமனைகளில் பெறப்பட்டன. இதையடுத்து அறிக்கை தயார் செய்யப்பட்டு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 25 லட்சம் பேருந்து பயண அட்டைகள் விரைவில் தயாரிக்கப்படவுள்ளன. இதுகுறித்த டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.