நீட் எழுதும் மாணவர்களுக்கு வைகோ வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 16, 2022

நீட் எழுதும் மாணவர்களுக்கு வைகோ வேண்டுகோள்

தற்கொலை முடிவு தீர்வு ஆகாது என்று நீட் எழுதும் மாணவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள்விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - ‘நீட்’ திணிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டில் இருந்து 17 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நடப்பு ஆண்டு ‘நீட்’ தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து, தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்நிலையில் ‘நீட்’ தேர்வு பயத்தால், கடந்த ஜூலை 7 ஆம் தேதி ஓசூர் அரசனட்டி பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரது 18 வயது மகன் முரளி கிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டார்.

அதேபோல, அரியலூர் மாவட்டம் இரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகள் நிஷாந்தினி, நாளை நடைபெற இருக்கும் ‘நீட்’ தேர்வுக்காக தயாராகி வந்த நிலையில், தோல்வி பயம் காரணமாக இன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 2017 ஆம் ஆண்டில் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த பட்டியல் இன மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதே அரியலூர் மாவட்டத்தில் இன்று பட்டியல் இன மாணவி நிஷாந்தினி உயிரைப் போக்கிக் கொண்ட சோகம் நிகழ்ந்து இருக்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ‘நீட்’ தோல்வி பயம் காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. ‘நீட்’ தேர்வு நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் பரிந்துரைக்கு இரண்டு முறை அனுப்பப்பட்டும் பயன் இல்லை. தமிழக ஆளுநரே ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாகவும், தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும் வெளிப்படையாக மத்திய அரசின் முகவர் போன்று கருத்துகளை கூறி வருகின்றார்.
கல்வித்துறையில் மாநில அரசின் உரிமையை தட்டிப் பறித்து, ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் மத்திய பாஜக அரசின் போக்கு கடும் கண்டனத்துக்கு உரியது. இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்று தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்கி வருவதற்கு மத்திய பாஜக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ விலக்கு சட்ட முன்வரைவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்துகின்றேன்.


‘நீட்’ தேர்வு எழுத முற்படும் மாணவர்கள் தோல்வி பயம் காரணமாக உயிரைப் போக்கிக் கொள்ளும் மனநிலைக்கு ஆளாகக் கூடாது; தற்கொலை என்பது தீர்வு ஆகாது; மருத்துவப் படிப்பு இல்லாவிடில் வேறு துறைகளில் முயன்று படித்து வாழ்வில் உயர முடியும் என்ற நம்பிக்கையை நெஞ்சில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.