பொறியியல் படிப்பு - சான்றிதழ் பதிவேற்றத்திற்கு நாளை கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 28, 2022

பொறியியல் படிப்பு - சான்றிதழ் பதிவேற்றத்திற்கு நாளை கடைசி நாள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக்., பி.ஆர்க். உள்பட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான பதிவும் கடந்த மாதம் 22ம் தேதி ஆரம்பமானது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்தே மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வந்தனர். சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமானதால், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவை முடிக்காமல், கால அவகாசம் கொடுத்து இருந்தனர். அதன்படி, சிபிஎஸ்இ தேர்வு முடிவு கடந்த 22ம் தேதி வெளியானது. இதையடுத்து, கூடுதலாக 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. தேர்வு முடிவு வெளியான அன்றைய தினமும், அதற்கு மறுநாளும் சிபிஎஸ்இ மாணவர்கள் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டினர். அதற்கு முந்தைய நாட்களில் நாளொன்றுக்கு 1000 பேர் பதிவு செய்த நிலையில், தேர்வு முடிவு வெளியானதற்கு பிறகு தினமும் 3 ஆயிரத்துக்கு மேல் விண்ணப்பித்து வந்தனர். அந்த வகையில் பொறியியல் படிப்புகளில் உள்ள 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்களுக்கு, இதுவரை 2,11,905 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு, இதுவரை 4,07,045 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பப்பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே அறிவித்தபடி, நேற்றோடு நிறைவடைந்து விட்டது. மேலும், பொறியியல் படிப்புக்கு மட்டும் 29ம் தேதி (நாளை) வரை சான்றிதழ் பதிவேற்றம் மற்றும் பணம் செலுத்தலாம். NATA தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை பி.ஆர்ச் படிப்பிற்கு தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிக்க கடந்த நான்கு ஆண்டுகளை விட இந்த ஆண்டு விண்ணப்ப பதிவு அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.